கஞ்சா புகைப்பதில் தகராறு வாலிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: நண்பர்களுக்கு வலை

ஸ்ரீபெரும்புதூர்:கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய அவரது நண்பர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோழி கோபி (எ) கோபி (25). கஞ்சா புகைக்கும் பழக்கமுடையவர். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் உள்ள தனது நண்பர்களை பார்க்க சென்றார். பின்னர் அதே பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா புகைத்தனர். பின்னர் கோபி, இரண்டு கஞ்சா பொட்டலங்களை பாக்கெட்டில் மறைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அவரின் நண்பர்கள், கஞ்சா பொட்டலங்களை கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் கோபி அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனால் நண்பர்களுக்கும், கோபிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி  கைகலப்பானது.

இதில், கோபியை நண்பர்கள் கத்தியால் தலை, கழுத்து, உடம்பு பகுதியில் சரமாரியாக வெட்டினர். கோபி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து கோபியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பெரும்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கோபியை அரிவாளால் வெட்டிய அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கஞ்சா பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விற்பனை அமோகம்

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலம், கீவளூர், இருங்காட்டுகோட்டை, காட்டரம்பாக்கம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வல்லம் ஆகிய பகுதியில் கஞ்சா பிடிக்கும் வாலிபர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் மேற்கண்ட பகுதியில் வடமாநில ஊழியர்களும் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தங்கு தடையின்றி கஞ்சா சப்ளை நடைபெற்று வருகிறது. இதனால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். இதனை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>