×

தோட்டத்தில் மேய்ந்ததால் பலாவில் விஷம் வைத்து 3 பசு மாடுகள் கொலை: கர்நாடகாவிலும் கொடூரம்

சிக்கமகளூரு: கேரளாவில் வெடிவைத்து கர்ப்பிணி யானையை கொலை செய்தது போல்,  கர்நாடகாவில் மர்ம நபர்கள் பலாப் பழத்தில் விஷம் வைத்து மூன்று  பசுமாடுகளை கொன்ற கொடூரம் நடந்துள்ளது. கேரளாவில்  சமீபத்தில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிகுண்டு வைத்த தேங்காயை சாப்பிட்டதால் வெடித்து சிதறி, பலத்த  காயம் அடைந்தது. அதன் வாய் முழுவதும் சிதறியது. அந்த வலியை தாங்க முடியாமல் மூன்று நாட்களாக தண்ணீர் மூழ்கி நின்று பரிதாபமாக இறந்தது. பன்றி வேட்டைக்காக கேரளாவில் இவ்வாறு தேங்காயில் வெடிகுண்டை வைத்து பயன்படுத்துவது வழக்கம்.  பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் தாக்கம் மனதை விட்டு அகலுவதற்கு முன்பாக,  இதே போன்ற சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.

இம்மாநிலத்தில், சிக்கமகளூரு தாலுகா  பசரவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிட்டே கவுடா. இவருக்கு சொந்தமாக இரண்டு  பசுக்கள் இருந்தன. அதே கிராமத்தை சேர்ந்த மது என்பரிடம் ஒரு பசு இருந்தது. இவை மூன்றும் அருகில் உள்ள தோட்டத்தில் மேய சென்றன.  அங்கிருந்த பலாப்பழத்தை சாப்பிட்டன. சிறிது நேரத்தில் மூன்று  பசுக்களும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தன. இது பற்றி தகவல் கிடைத்ததும் அங்கே சென்ற  கிட்டே கவுடாவும், மதுவும் போலீசில் புகார்  செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், அடிக்கடி தோட்டத்துக்குள் சென்று மாடுகள் மேய்ந்ததால் ஆத்திரம் அடைந்த மர்ம  நபர்கள்,  பலாப்பழத்தில் விஷம் வைத்து அவற்றை கொன்றதாக தெரியவந்தது. இது  தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகிறார்கள்.

Tags : garden ,Karnataka , 3 cows killed, poison , jack,graze, garden,horror in Karnataka
× RELATED மாமல்லபுரத்தில் இரவு நேரங்களில்...