ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் பழகி நேர்ல பார்க்கும்போதே அழகா இருக்க...பேஷியல் செய்தால் முகம் இன்னும் ஜொலிக்கும்...: பெண்ணை புகழ்ந்து பேசி 6 சவரன் நகையுடன் காதலன் ஓட்டம்: வாலிபருக்கு போலீஸ் வலை

சென்னை: ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் பழகி, இளம் பெண் ஒருவரை பேஷியல் செய்ய அழைத்து சென்று 6 சவரன் நகைகளுடன் தப்பி ஓடிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் உமா(24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் திருமணம் மையம் மூலம் பெற்றோர் வரன் பார்த்து வருகின்றனர். இதற்கிடையே ஆன்லைன் திருமணம் தகவல் மையம் மூலம் சூர்யகணேஷ்(28) என்பவர் உமாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் இருவரும் தினமும் வாட்ஸ் அப் வீடியோ காலில் கடந்த 3 மாதங்களாக ஒருவருடன் ஒருவர் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் இருவரும் நேரில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி உமா தான் திருமணம் செய்து கொள்ளும் நபரை சந்திக்க வீட்டில் வைத்திருந்த 6 சவரன் நகைகளை அணிந்து கொண்டு பெற்றோரிடம் தோழியை பார்க்க செல்வதாக வீட்டில் இருந்து நேற்று முன்தினம் வெளியே வந்துள்ளார். பின்னர் கால் டாக்சி மூலம் பள்ளிக்கரனை சென்று அங்கு காத்திருந்த தனது காதலன் சூர்யகணேஷை அழைத்து கொண்டு தி.நகர் வந்துள்ளார். பிறகு இருவரும் பாண்டி பஜாரில் உள்ள பூங்கா அருகே  இருவரும் சில மணி நேரம் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது காதலன் சூர்யகணேஷ் உனக்கு பேஷியல் செய்தால் உன் முகம் இன்னும் பிரகாசமாக இருக்கும் என்று கூறியுள்ளார். உடனே உமா பேஷியல் செய்து கொள்கிறேன் என்று காதலனிடம் கூறியுள்ளார்.

பிறகு பாண்டிபஜாரில் உள்ள பியூட்டி பார்லர் ஒன்றுக்கு உமாவை பேஷியல் செய்ய சூர்யகணேஷ் அழைத்து சென்றுள்ளார். அப்போது உமா தான் அணிந்து இருந்த சவரன் செயினை, கம்பல் என 6 சவரன் நகைகளை தனது வருங்கால கணவரான சூர்யகணேஷிடன் கழற்றி கொடுத்து விட்டு பேஷியல் செய்து கொண்டிருந்தார். பேஷியல் முடிந்த உடன் வெளியே இருந்த காதலன் சூர்யகணேஷை பார்த்த போது அவர் 6 சவரன் நகைகளுடன் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே உமா, காதலனை செல்போனில் அழைத்த போது அவரது செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து உமா பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி 6 சவரன் நகைகளுடன் மாயமான காதலன் சூர்யகணேஷை அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பாண்டி பஜாரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>