×

தி.மு.க. தலைமையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்தவர் ஜெ.அன்பழகன் : காங்கிரஸ், பாஜக , தேமுதிக தலைவர்கள் இரங்கல்!!

சென்னை : கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் ஜெ அன்பழகனின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் செய்தி விடுத்துள்ளனர்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், பதினைந்து வருடம்  தென் சென்னை மாவட்ட செயலாளராகவும், மூன்று முறை  சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய  திரு ஜே. அன்பழகன் அவர்கள்  மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். திராவிட இயக்கத்தின் தொடக்க கால தளகர்த்தராக விளங்கிய தியாகராய நகர் பழக்கடை ஜெயராமன் அவர்களின் மகனான ஜெ. அன்பழகன் போர்க்குணம் மிக்க செயல்வீரராக விளங்கி வந்தவர். மனதில் பட்டதை துணிச்சலாக கூறக்கூடியவர்.

தி.மு.க. தலைமையின் நம்பிக்கைக்குரிய தளபதியாக செயல்பட்டு வந்தவர். சோதனையான காலத்தில் உறுதியாக இருந்தவர்.தி.மு.க. தலைமை இவரிடம் எத்தகைய பொறுப்பு வழங்கினாலும், குறிப்பாக பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்துவதில் இவருக்கு நிகர் எவருமில்லை. இவரது இறுதி காலத்தில் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வாரி வழங்கியவர். இவரது இறப்பு மிகுந்த வேதனையை தருகிறது.

திரு ஜே. அன்பழகன் அவர்கள் மறைவால் வாடும் தி.மு.க. தலைவர் தளபதி திரு மு. ஸ்டாலின் அவர்களுக்கும், அவரது கட்சியினருக்கும், குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும், மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தில் சுமார் 15 ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக தொடர்ந்து பணியாற்றி வருபவரும், தி.மு.கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவராய், டாக்டர் கலைஞர், தளபதி திரு.ஸ்டாலின் ஆகியோரின் உற்ற சகோதரராய், உயிர் தோழராய் மிகச் சிறப்பாக பொது வாழ்விலும், சட்டமன்றத்திலும் மக்கள் தொண்டாற்றியவருமான அருமை சகோதரர் திரு. ஜெ. அன்பழகன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது பிறந்த நாளான இன்று இயற்கை எய்திய செய்தி அறிந்து மனம் மிக வருந்துகிறேன்.

திரு.ஜெ. அன்பழகன் அவர்கள் தைரியமும், துணிச்சலும், அன்பும், கடின உழைப்பும் விசுவாசமும் நிறைந்த இனிய சகோதரர்.  அவரது மறைவு தி.மு.கழகத்திற்கும் குறிப்பாக சகோதரர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் பேரிழப்பாகும்.   அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், தி.மு.க. தலைவர் மற்றும் தொண்டர்கள், தேர்ந்தெடுத்த தொகுதி மக்கள் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை பெரும் துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனத் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மேலும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள இரங்கல் பதிவில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு.J.அன்பழகன், கொரானாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்திகேட்டு மனவருத்தம் அடைந்தேன்.அவரை இழந்துவாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன், என்று தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் முருகன் இரங்கல்

தமிழக பாஜக தலைவர் முருகன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தாருக்கு அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Congress ,leaders ,TMC ,BJP , DMK , Leader, Trust, Commander, J.Annabhagan, Congress, BJP, TMD, Leaders, condolences
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...