×

சென்னையில் எந்த மருத்துவமனையிலும் படுக்கைகள் இல்லை: வீடியோ வெளியிட்ட டி.வி. நடிகர் வரதராஜனை கைது செய்ய போலீஸ் தீவிரம்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்று வீடியோ வெளியிட்ட டி.வி. நடிகர் வரதராஜனை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையை சேர்ந்தவர் வரதராஜன். தொலைக்காட்சியில் சீரியல் நடிகராகவும், செய்தி வாசிப்பாளராகவும் இருந்தவர். இவர் நேற்று முன்தினம் காலை சமூகவலைதளங்களில் 3 நிமிடம் ஓடக்கூடிய விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனது நண்பருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுதிணறல் ஏற்பட்டதையடுத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க முயன்ற போது மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லை என்றதால் அவர் உயிரிழந்தார்.இதனால் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்ல வேண்டாம் என்றும், அப்படியே வெளியில் செல்ல வேண்டும் என்றால் மாஸ்க், பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்ற வேண்டும் என்று வீடியோ பதிவு செய்திருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை செய்திருந்தார். இந்நிலையில் சுகாதாரத்துறை இயக்குநர் சார்பில் சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனிடம் கொரோனா குறித்தும், பொதுமக்களிடம் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் நேற்று இரவு டி.வி.நடிகர் வரதராஜன் மீது அரசின் உத்தரவுக்கும் பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்தல், பேரிடர் மேலாண்மை சட்டம், தவறான தகவல் மூலம் மக்களிடையே விரோத உணர்வை தூண்டுதல், தொற்று நோய் தடுப்பு சட்டம் என 4 பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக டி.வி.நடிகர் வரதராஜனுக்கு சைபர் க்ரைம் போலீசார் இன்று நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி நேரில் ஆஜராகவில்லை என்றால் வரதராஜன் கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.


மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது: செய்தி வாசிப்பாளர் வரதராஜன் கொரோனா நிலவரம் குறித்து தனக்குத் தெரிந்த அனுபவங்களை ஒரு விழிப்புணர்வு வீடியோவாக பதிவிட்டிருந்தார். அதைக் கூட பொறுத்திட முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். வரதராஜன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்.

Tags : Chennai ,Varadarajan No ,arrest , Chennai, hospital, no beds, actor Varadarajan, police, intensity
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...