×

கொரோனா வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவில் ஊடுருவல்: வங்கதேசத்தினரால் திருப்பூருக்கு ஆபத்து: கேரளாவில் சிக்கியது ஒரு குடும்பம்

எர்ணாகுளம்: , கொரோனா பாதிப்பால் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் சொந்த ஊர் திரும்பிய நிலையில், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,  வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊருவிய பலர் திருப்பூரில் முகாமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்கள் வழியாக திறந்தவெளி எல்லையை பயன்படுத்தி சட்ட விரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தினர், அங்கிருந்து பிழைப்பு தேடி திருப்பூர் மற்றும் கேரளாவுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இதுபோன்று, கொரோனா ஊரடங்கையும் மீறி ஊடுருவிய வங்கதேசத்தை சேர்ந்த 6 பேர் கொண்ட குடும்பம், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் செராய் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை சில கேரள பத்திரிகை நிருபர்கள் கண்டறிந்து தகவல் சேகரித்துள்ளனர். இவர்கள் 15 பேர் கொண்ட குழுவாக வந்துள்ளனர். எர்ணாகுளத்தின் பல இடங்களில் கூலித் தொழிலாளிகளாக வேலை பார்க்கும் இவர்கள், ஒருநாளைக்கு 800 வரை சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த 3 மாதத்தில் மட்டும் ஏராளமான வங்கதேசத்தினர் ஊடுருவியிருப்பதாக கேரளாவின் உளவுத்துறை தகவல்களும் உறுதி செய்துள்ளன. அந்த அதிகாரிகள் கூறுகையில், ‘‘வங்கதேசத்திலிருந்து ஊடுருவியர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இவர்களுக்கு இந்திய தரப்பிலிருந்தும் சிலர் உதவி செய்கின்றனர். இவ்வாறு வரும் ஊடுருவல்காரர்கள் 5,6 போலி அடையாள அட்டைகளை வைத்திருக்கிறார்கள்,’’ என்றார். வங்கதேசத்தினருக்கு போலி ஆதார் அட்டையை தயாரித்து தரும் முக்கிய இடமாக திருப்பூர் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான ஏஜென்ட்டுகள் போலி ஆதார் அட்டை தயாரித்து தர 2,500 வரை வசூலிக்கின்றனர். இத்தகைய ஏஜென்ட்டுகள் பெரும்பாலும் பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்களாகவே உள்ளனர்.

உளவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஊடுருவியவர்கள் குறித்து தகவல் சேகரித்து மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் தருவதற்கு மட்டுமே எங்களுக்கு அதிகாரம் உண்டு. மற்றபடி மத்திய, மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தற்போது ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்திலிருந்து திருப்பூர் வந்தவர்கள் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். மேற்கொண்டு பலர் ஊடுருவி வருவதால், அவர்களால் பல்வேறு வகையான அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புண்டு,’’ என்கின்றனர்.

எங்களையே குறி வைப்பது ஏன்?
செராயில் தங்கியுள்ள வங்கதேச குடும்பத்தினர், ‘எங்களையே ஏன் குறி வைக்கிறீர்கள்? இந்த மாவட்டத்தில் மட்டுமே எங்களைப் போன்ற நூற்றுக்கணக்கானோர் பரவி இருக்கிறார்கள். திருப்பூரிலும் பலர் வேலை செய்து பிழைக்கிறார்கள். எங்களைப் பற்றி தகவல்களை வெளியிட்டு, குடும்பம், குழந்தைகளோடு வேறுவழியின்றி வந்த எங்களை பிரச்னையில் மாட்டி விடாதீர்கள்,’ என கூறுவதாக கேரளாவில் வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.


Tags : Kerala ,Tirupur ,Bangladeshis ,A Family Stranded , Corona, Navigation, Kerala
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...