×

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் மருத்துவ கட்டணத்தை அரசே ஏற்குமா?

* நிர்ணயித்ததை விட அதிகமாக வசூலிப்பதாக புகார்கள் வருவது குறித்து ஐகோர்ட் கேள்வி

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கலாமே என்று கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க வசதிகள் ய்யப்பட்டுள்ளனவா, அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. இதனால் ஓரளவு வசதி படைத்தவர்கள், நடுத்தர குடும்பத்தினர், அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா காலத்தை பயன்படுத்திக் கொள்ளும் தனியார் மருத்துவமனைகள், லட்சம், லட்சமாக பணத்தை கறந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கொரோனாவுக்கு மருந்தே கண்டுபிடிக்காத காலத்தில், கொரோனா நோயிலிருந்து காப்பாற்றிவிட்டதாக கூறி பணத்தை பிடுங்குவதாக தனியார் மருத்துவமனைகள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்று கூறி பணத்தை அதிகமாக பிடுங்குவதற்காக கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து தொடர்ந்து புகார்கள் வந்ததால், தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக சுகாதாரத்துறை அறிவித்தது. இந்தநிலையில், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும்,  கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் என்று கோரி வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘பேரிடர் மேலாண்மை சட்டப்படி, பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சை செலவை சம்பந்தப்பட்ட மாநில அரசே ஏற்க வேண்டும். ஆனால், தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவறானது. தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது’’ என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை செலவை அரசே ஏற்பது குறித்தும், அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா, அதிக கட்டணம் வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும்’’ தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
 இந்த வழக்கில் மத்திய அரசையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், கொரோனா தொற்று சிகிச்சைக்கு  மாநிலங்களுக்கு மத்திய அரசு என்னென்ன அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளது என்பது குறித்தும், தனியார் மருத்துவமனை சிகிச்சை கட்டணம் குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

அடுத்தடுத்து பரபரப்பு
10ம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்ததால், தேர்வே ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தனியார் மருத்துவமனைகள் குறித்தும் நீதிமன்றம் விசாரணையை தொடங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : hospitals ,government ,care providers , government, medical bills,coronary, care providers , private hospitals?
× RELATED முதன்முறையாக இன்சுலர் மூளைக்...