×

‘தனிமை’ மையத்தில் விஷ ஜந்து கடித்து 16 பேர் பலி; பினாயில், உப்பைத் தூவினா பாம்பு ஓடிடுமா..? சட்டீஸ்கர் மாநிலத்தில் இப்படியொரு சோகம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் வெவ்வேறு தனிமைப்படுத்தும் மையங்களில் பாம்பு கடித்து இதுவரை 16 பேர் பலியாகிய நிலையில், பாம்புகள் படையெடுப்பை தடுக்க பினாயிலும், உப்பு கரைசலும் தூவப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் ஜோத்புர் மாவட்டத்தில் இருந்து 350 கி.மீ. தொலைவில் இருக்கும் ராய்ப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தும் மையங்களில் பாம்புக் கடியால் பலியாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டீஸ்கரின் ‘நாகலோகம்’ என்று அழைக்கப்படும் இப்பகுதியில் மட்டும் 200 வகையான விஷப் பாம்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது மகாராஷ்டிரா, கேரளா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்திலிருந்து திரும்பி வந்த 978 சட்டீஸ்கர் மாநில புலம்பெயர் தொழிலாளர்கள், அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 16 பேர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தனிமைப்படுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்போரை படையெடுத்து வரும் பாம்புகளிடம் இருந்து பாதுகாக்க பினாயில் மற்றும் உப்பைக் கலந்து, தனிமைப்படுத்தும் வளாகத்தில் தடுப்புகள் கட்டி, உப்பைத் தூவி பாம்பிடம் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கி உள்ளது.

இதுகுறித்து, துணை கலெக்டர் போஷக் சவுத்ரி கூறுகையில், ‘பினாயில், திரவ  செறிவுடன் கலந்த உப்பு போன்றவை வளாகத்தின் எல்லையைச் சுற்றி தூவப்படுகிறது.  அப்போதுதான் பாம்பு போன்ற ஊர்வனங்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு  நுழையாது’ என்றார். ஆனால், இதுபோன்ற வழிமுறைகள் பாம்புகளிடம் இருந்து தப்பிக்க உதவும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.  இதுகுறித்து டாக்டர் தினேஷ் மிஸ்ரா கூறுகையில், ‘பாம்புகள் மையங்களுக்குள் நுழைவதை தடுக்க, ஈரமான பகுதிகளை அல்லது விரிசல், துளைகள் அல்லது ஓட்டைகள் போன்ற பகுதிகளை கண்டறிந்து அடைக்க வேண்டும்.

அதனை விடுத்து, மாற்றுவழிமுறையை கையாளுவது சரியல்ல. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். உப்பு, பினாயில் போன்றவற்றை தெளிப்பதால், தூவுவதால் பாம்புகள் மையங்களுக்குள் நுழையாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?’ என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


Tags : center ,Binoy ,Chhattisgarh ,tragedy ,state , Poison jandu, snake, Chhattisgarh
× RELATED சாத்தான்குளத்தில் காட்சிப்பொருளான பழைய அங்கன்வாடி மைய கட்டிடம்