×

புதுவையில் இருந்து கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா?.. வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

புதுச்சேரி: புதுவையில் இருந்து கடலூர், விழுப்புரம் பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளனர். இதற்கான நடவடிக்கையை இருமாநில அரசுகளும் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா தேசிய ஊரடங்கு மார்ச் 23ம்தேதி முதல் அமலுக்கு வந்தது. தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைக்காக பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. இருப்பினும் கொரோனா பாதிப்பு ஒவ்வொரு மாநிலத்திலும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசுகள் கவனம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களை தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

முககவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் ஆகியவற்றை கட்டாயமாக கடைபிடிக்க அறிவுறுத்துகின்றனர். இருப்பினும் பொதுமக்களில் 30 சதவீதம் பேர் அதை அலட்சியப்படுத்தி வெளியே நடமாடுகின்றனர். இதனால் புதுச்சேரியில் ஊரடங்கில் பெருமளவில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் அவற்றால் வியாபாரிகளும், தொழில் நிறுவனங்களும் பெருமளவில் பயனடைய முடியாத நிலையே தற்போதுவரை நீடிக்கிறது. சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டாலும் ஆள்நடமாட்டம் இல்லை. ஓட்டல்கள், கடைகளில் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. தொழில்கள் முடக்கப்பப்பட்டு ஆயிரக் கணக்கானோர் வேலையிழந்து உள்ளனர். ஆட்டோ, டாக்சிகள் ஓடினாலும் சுற்றுலா பயணிகள் வரத்து அடியோடு இல்லாததால் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. மதுக்கடைகள் திறக்கப்பட்டும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லை. அதேவேளையில் விலை குறைவான சாராயக்கடைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது.

புதுவையில் பிஆர்டிசி பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுத்தும் முழுமையாக அரசு பஸ்கள் இதுவரை இயக்கப்படவில்லை. பயணிகள் வரத்து குறைவாக இருப்பதாக கூறி பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் அப்படியே நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரி, காரைக்காலில் தலா 5 டவுன் பஸ்களும், புதுச்சேரி- காரைக்கால் இடைநில்லா பேருந்து தலா 3 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதேவேளையில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் அரசு ஊழியர்கள், மருத்துவ பணியாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் காலை, மாலையில் கடலூர் பணிமனை 6, விழுப்புரம் பணிமனை 6 பஸ்களை மட்டுமே மாறிமாறி இயக்கி வருகின்றன. இதுஒருபுறமிருக்க தனியார் பஸ் சேவைகள் அடியோடு நிறுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிகளவில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா ஊரடங்கிற்குபின் அவற்றை இயக்க தனியார் பஸ் உரிமையாளர்கள் இதுவரை முன்வரவில்லை. அவர்கள் அரசிடம் இருந்து தங்களுக்கு முறையான ஒப்புதல் அளிக்கப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் இருந்து கடலூர், விழுப்புரம் மாவட்டத்துக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இன்னும் எத்தனை நாட்கள்தான் கொரோனா என்ற பெயரில் பொது போக்குவரத்து முடக்கி, வியாபாரத்தில் நஷ்டம், வேலைவாய்ப்பு இல்லாமல் பரிதவிப்பது என்ற ஆதங்கத்தை அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுபற்றி புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் கேட்டால், இருமாநில முதல்வர்களும் பேசி எடுக்க வேண்டிய முடிவு இது? என கைநழுவி விட்டார். ஆனால் பொது போக்குவரத்து சேவையை புதுச்சேரி, தமிழகம் பகுதிகளில் தொடங்குவது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி தமிழக முதல்வருடன் இதுவரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தமிழக அரசு பணிமனை வட்டாரத்தில் கேட்டபோது, புதுச்சேரி அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என தெரிவிக்கின்றனர். முறையான உத்தரவு வெளியானால் அடுத்த சில நிமிடத்திலே பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம் என பணிமனை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இருமாநிலம் இடையிலான போக்குவரத்து சேவையை தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் நிலவி வருகிறது. தற்போது புதுச்சேரியில் மட்டுமின்றி கடலூர், விழுப்புரம் மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறினாலும் தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண் ணிக்கை மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே ஜூன் 30ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பை காரணமாக கொண்டு பொது போக்குவரத்து சேவையை புதுச்சேரி அரசு நிறுத்தி வைக்காமல் அவற்றை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்குமா?

Tags : Cuddalore ,Villupuram ,Puduvai , Buses to Puduvai, Cuddalore, Villupuram and buses
× RELATED கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை..!!