×

உடன்குடி பகுதியில் சமூக இடைவெளி, முககவசம் மறந்த பொதுமக்கள்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

உடன்குடி: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் உடன்குடி பகுதியில் சமூக இடைவெளி, முககவசமின்றி பொதுமக்கள் சுற்றி திரிந்து வருகின்றனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொரோனா பரவலையொட்டி கடந்த மார்ச் 24ம்தேதி முதல் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தோற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, போலீசார், உள்ளாட்சித் துறை அதிகாரி மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், பொதுமக்கள் சமூக இடைவெளி, முககவசம் அணிந்து வரவும் வலியுறுத்துகின்றனர்.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 100க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளியாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உடன்குடி பஜார் பகுதியில் பொருட்கள் வாங்க கூடும் பொதுமக்கள் கொரோனா வைரஸ் தொற்று நோய் குறித்த எவ்வித பயமும் இல்லாமல் சமூக இடைவெளி, முககவசமின்றி திரிந்து வருகின்றனர். மெயின் பஜாரில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் செட் அமைத்து முகாமிட்டு பஜாரில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ஆகியோரை எச்சரிக்கை செய்தும், விழிப்புணர்வு குறித்து மைக் செட் அமைத்து பேசி வந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் உடன்குடி பகுதியில் உள்ள கடைகளிலும் சரி, பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளிலும் சமூக இடைவெளி, முககவசம் ஏதும் அணியாமல் சுற்றித்திரிந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : civilians ,area , Immediacy, social space, flattery, public
× RELATED மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று...