மரக்காணம் அருகே ஏரிமேடு ஏரியை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் தனிநபர்கள்

* கண்டுகொள்ளாத அதிகாரிகள்

* நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மரக்காணம்: மரக்காணம் அருகே இ.சி.ஆர் சாலை ஓரம் கூனிமேடு ஊராட்சியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் ஏரிமேடு ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி ஏரிமேடு, செவிடன்குப்பம், செட்டிக்குப்பம், செட்டிநகர், செய்யாங்குப்பம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியில் இந்த ஏரி தான் மிகப்பெரிய ஏரியாக அமைந்துள்ளது. இதில் பருவ மழைக்காலத்தில் நிரம்பும் தண்ணீரை கொண்டு இப்பகுதியில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு நெல், மணிலா, கம்பு, கேழ்வரகு, தர்பூசணி போன்ற பயிர்களை விவசாயிகள் நடவு செய்கின்றனர். இதுபோல் இப்பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் தென்னை விவசாயமும் செய்கின்றனர்.

மேலும் இந்த ஏரி, இப்பகுதியின் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் உள்ளது. இதில் நீர் நிரம்பினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தேவையையும் சரி செய்கிறது. இதில் ஆண்டு முழுக்க தண்ணீர் இருக்கும். இதனால் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பருவகால மாற்றம் மற்றும் இனப்பெருக்கத்துக்காக இப்பகுதிக்கு வரும் அபூர்வ பறவைகள் இந்த ஏரியில் கிடைக்கும் உணவுக்காக இங்கேயே கூட்டமாக  சுற்றித்திரியும். இதனால் இந்த ஏரியை சுற்றுலா தலமாக அறிவித்து படகு சவாரி விடவேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனால் இந்த ஏரியில் படகு சவாரி இயக்க அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஏரியின் அருகில் ஒரு சில தனிநபர்கள் நிலங்கள் வாங்கி வைத்துள்ளனர். இதுபோல் நிலங்கள் வைத்திருக்கும் தனிநபர்கள் தங்களது நிலத்துக்கு பொது சாலையை சுற்றிச்செல்லாமல் ஏரியின் வழியை பயன்படுத்தி வெகு விரைவாக செல்ல பொதுமக்கள் மற்றும் விவசாயத்துக்கு பயன்படும் ஏரியின் மையப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து அந்த இடத்தில் சாலை அமைக்கும் முதல் கட்டப்பணியில் ஈடுபட்டு வருவதாக இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஏரிமேடு கிராமத்துக்குட்பட்ட விஏஓ முதல் மரக்காணம் வட்டாட்சியர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முறையாக புகார் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி ஏரியை ஆக்கிரமித்து சாலை அமைக்கும் தனிநபர்கள் மீது மாவட்டம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories:

>