×

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் கால்நடைகளுடன் விவசாயிகள் போராட்டம்: கருப்புகொடி ஏந்தி அமைச்சர்களுக்கு கண்டனம்

சேலம்: சேலத்தில் 5வது நாளாக, 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்நடை களுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலத்தில் இருந்து சென்னைக்கு ரூ10 ஆயிரம் கோடியில், 8 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதனை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்குமாறு, மத்திய அரசு கோரிக்கை விடுத் துள்ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இதனை கண்டித்து சேலம் பூலாவரி, குப்பனூர், நாழிக்கல்பட்டி வட்டக்காடு, ராமலிங்கபுரம் என தொடர்ச்சியாக, கருப்பு கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, 5வது நாளாக, இன்று எருமாபாளையத்தில் கால்நடைகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையிலேயே கால்நடைகளுடன் வயல்களில் திரண்ட விவசாயிகள், கையில் கருப்பு கொடியை ஏந்தினர். அப்போது, 8 வழிச்சாலை திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “சேலம் உள்பட 5 மாவட்ட விவசாயி களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் 8 வழிச்சாலைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் மட்டும் கண்டுகொள்ளாமல் உள்ளன.

தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை, விரைவாக விசாரிக்க கோருவது, விவசாயிகளுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, விவசாயிகள் வேதனையில் இருக்கும் நிலையில், தமிழக அமைச்சர்கள் கட்டாயம் 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற தோணியில் பேசி வருகின்றனர். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லையோ என்ற சந்தேகம் நீடிக்கிறது. அதேசமயம், 8 வழிச்சாலைக்காக போராடும் விவசாயிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்வது வேதனையளிக்கிறது. எனவே அந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்” என்றனர்.Tags : protest ,Salem , 8 Wayfarer, Resistance, Farmers' Struggle with Livestock
× RELATED தூர்வார ஒதுக்கிய நிதியில் முறைகேடு;...