×

அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: அடுத்த 48 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியின் ஒருசில இடங்களில் லேசான மழையும், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியின் ஒருசில இடங்களில் சேலான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 38 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் நிலவும். கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஜூன் 9 முதல் 11ம் தேதி வரை மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 9 முதல் 13ம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 11 முதல் 12ம் தேதி வரை லட்சத்தீவு, கேரளா மற்றும் கர்நாடகா கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். ஜூன் 13ம் தேதி கேரளா மற்றும் கர்நாடகா பகுதிகளில் சூறாவளி காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். கடல் அலை 3.0 முதல் 3.4 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒருசில நேரங்களில் எழும்பக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Thundershowers ,Coimbatore ,Theni ,Nilgiris ,areas ,Dindigul , Tamil Nadu, Puducherry, Rain, Chennai Weather Center
× RELATED அடுத்த 24 மணிநேரத்தில் கோவை, நீலகிரி...