×

நேபாள எல்லையில் கொல்லப்பட்ட குமரி ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்

திங்கள்சந்தை: நேபாள எல்லையில் கொல்லப்பட்ட குமரி ராணுவ வீரர் மணிகண்டன் உடல், 21 குண்டுகள் முழக்க நேற்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. குமரி மாவட்டம் குருந்தன்கோடு, வீரவிளை பகுதியை சேர்ந்தவர் பங்கிராஜ் மகன் மணிகண்டன்(29). கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி துணை ராணுவ படை பணியில் சேர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த மார்ச் 7ம் தேதி இரவு ரோந்து பணியின் போது நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு மாடு கடத்த முயன்ற கடத்தல்காரர்களை தடுத்தார்.அப்போது கடத்தல்காரர்கள் ஆயுதத்தால் கொடூரமாக மணிகண்டனை தாக்கிவிட்டு தப்பினர். பின்னர் மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜூன் 5ம் தேதி மணிகண்டன் இறந்தார். இதையடுத்து அவரது உடல் விமானத்தில் திருவனந்தபுரம் எடுத்து வரப்பட்டு, நேற்று முன்தினம் இரவு சுமார் 8.30 சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 8.30 மணிக்கு மணிகண்டன் உடல் வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

இதையடுத்து ராணுவ அதிகாரிகள், எஸ்பி நாத், குளச்சல் ஏஎஸ்பி விஸ்வேஸ் சாஸ்திரி, பிரின்ஸ் எம்எல்ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் மெர்லியன்று தாஸ், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய தலைவி அனுஷா தேவி, ஆணையாளர் ஜெய, கல்குளம் தாசில்தார் ஜெகதா, துணை தாசில்தார் மரகதவள்ளி, கக்கோட்டுதலை ஊராட்சி தலைவர் ஜெரால்டு கென்னடி, பாஜ தலைவர் தர்மராஜ், மூத்த தலைவர் எம்ஆர் காந்தி, பொதுச்செயலாளர் குமரி. பா.ரமேஷ், குருந்தன்கோடு ஒன்றிய திமுக செயலாளர் எப்.எம். ராஜரெத்தினம், மாநில திமுக சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் ஜோசப்ராஜ் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து குருந்தன்கோட்டில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத்தில் ராணுவ வீரர்கள் 21 குண்டுகள் முழக்க மணிகண்டன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Tags : Kumari ,Nepal ,soldier ,border , Body , Kumari soldier killed , Nepal border
× RELATED சித்திரை மாத பிறப்பையொட்டி குமரி...