×

ஏழுமலையான் கோயில் மீண்டும் களைகட்டியது சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு மணி நேரத்தில் 1,200 பக்தர்கள் தரிசனம்: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் தொடக்கம்

திருமலை:  திருப்பதி ஏழுமலையான் கோயிலில், சமூக இடைவெளியை பின்பற்றி நேற்று ஒரு மணி நேரத்தில் 1,200க்கும் மேற்பட்டோர் சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்  ஒரு சில நிபந்தனைகளுடன்  வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து, திருப்பதி ஏழுமலையான் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி, உறுப்பினர் சேகர்ரெட்டி, செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் ஆகியோர் தலைமையில்  கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் பக்தர்களை அனுமதிக்க தேவையான ஏற்பாடுகளை செய்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் நடைபெற்றது. தொடர்ந்து ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் காலை 5 மணிக்கு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்தபடி சுவாமியை தரிசனம் செய்தனர். அப்போது, தீர்த்தம், சடாரி, சிறிய லட்டுகள் வழங்கப்படவில்லை.துவாரபாலகர்கள் அருகே சுவாமி தரிசனம் செய்தபிறகு, கோயிலுக்குள் உள்ள வரதராஜ சுவாமி சன்னதி, வக்குலமாத சன்னதி, ராமானுஜர் உள்ளிட்ட வேறு எந்த சன்னதிக்கும் செல்ல முடியாத வகையில் தடுப்பு அமைக்கப்பட்டு நேரடியாக உண்டியல் காணிக்கை செலுத்தும் இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பிறகே உண்டியல் காணிக்கை செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.  திருமலைக்கு  வரும் அனைத்து பக்தர்களுக்கும் அலிபிரியில் உடல் வெப்பநிலை  கண்டறிந்து, கிருமிநாசினி கொடுத்து கைகளை சுத்தம் செய்த பின்னரே  மலைக்கு அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக தேவஸ்தானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் 6  ஆயிரம் பேர் நேற்றும், இன்றும் அனுமதிக்கப்படுக்கின்றனர். நாளை (புதன்கிழமை) திருமலையில்  வசிக்கும் உள்ளூர் மக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 11ம் தேதி முதல் மற்றப்பகுதிகளை சேர்ந்த மக்கள் ஏழுமலையானை தரிசிக்கலாம். இதற்காக நேற்று காலை முதல் தேவஸ்தான இணையதள வெப்சைட் மூலம் 3 ஆயிரம் டிக்கெட்களுக்கான முன்பதிவு தொடங்கியது. அதேபோல் ₹300க்கான தரிசன டிக்கெட்டில் 3 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான முன்பதிவும் தொடங்கியது.இதுகுறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறியதாவது:
ஒரு மணி நேரத்திற்குள் 500 பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சோதனை முறையில் அனுப்பப்பட்டதன் மூலம் நேற்று ஒரு மணி நேரத்தில் 1200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்துள்ளனர்..

இதனால் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இதுபற்றி அதிகாரிகளுடன் ஆலோசித்து 11ம் தேதி முதல் அனைத்து மாநில பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே ஒரு நாளைக்கு ஆன்லைன் மூலமாக 3 ஆயிரம், நேரடியாக 3 ஆயிரம் என மொத்தம் 6 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது நடந்த சோதனை ஓட்டத்தில் பக்தர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், ஏழுமலையான் கோயில் குறித்து யார் அவதூறாக பேசினாலும், பக்தர்கள் மனம் புண்படும் விதமாக பேசினாலும் என்னால் சும்மா இருக்க முடியாது. யாராக இருந்தாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நடிகர் சிவக்குமார் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் தகாத முறையில் நடந்து கொள்வதோடு, மது அருந்துவதாகவும், குளிக்காமலேயே சுவாமி தரிசனம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். அப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் நடந்தது கிடையாது. நடிகர் சிவக்குமார் பேசிய வீடியோ எப்போதோ பேசியது. இருப்பினும் தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, பக்தர்கள் மனம் புண்படும் விதமாக உள்ளதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : devotees ,Darshan ,pilgrims , 1,200 pilgrims ,one hour Darshan, Online ticket reservation
× RELATED கோடை விடுமுறையை கொண்டாட கொளுத்தும் வெயிலிலும் குவிந்த பக்தர்கள்