×

தாமதமாகும் பருவமழை அமராவதி, திருமூர்த்தி அணை நீர்மட்டம் சரிவு

உடுமலை:  திருப்பூர் மாவட்டத்தில் பருவமழை தாமதமாகி வரும் நிலையில் அமராவதி,  திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகள் உள்ளன. 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் முழு கொள்ளளவை எட்டியது. தற்போது பருவமழை தாமதம் காரணமாக அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. நீர்வரத்து 92 கன அடியாகவும், வௌியேற்றம் 6 கன அடியாகவும் உள்ளது.இதேபோல 60 அடி கொள்ளளவு கொண்ட திருமூர்த்தி அணையிலும் நேற்றைய நிலவரப்படி 24.81 அடி அளவிற்கே நீர்மட்டம் உள்ளது. அணையிலிருந்து குடிநீருக்காக வினாடிக்கு 27 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.அமராவதி அணையை பொறுத்தவரை திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் கல்லாபுரம், ராமகுளம் நேரடி கால்வாய் மூலம் சுமார் 3500 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

ஆண்டுதோறும் ஆற்றுப்பாசனம், நேரடி பாசனத்திற்காக ஜூலை மாதம் முதல் மார்ச் மாதம் வரை அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதேபோல செப்டம்பர் முதல் ஜனவரி வரை பிரதான கால்வாய் வழியே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இது தவிர தாராபுரம் முதல் கரூர் வரை நூற்றுக்கணக்கான வழியோர கிராமங்களுக்குரிய குடிநீர் தேைவயையும் அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரே பூர்த்தி செய்கிறது.
இந்நிலையில் அணையில் 26 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. அதிலும் 10 அடி வரை சேறும்,சகதியும் தேங்கியிருக்கும். ஆண்டுதோறும் ஜூன் மாத முதல் வாரத்திலேயே பருவமழை துவங்கி இருக்கும். தற்போது கேரளாவில் அவ்வப்போது சாரல்மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் பருவமழை துவங்கினால் மட்டுமே அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கு கைகொடுப்பதோடு  குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும்.

Tags : Thirumurthi , Delayed monsoon, Amaravathi, Thirumurthi dam, fall
× RELATED திருமூர்த்தி மலைக்கு வரும் சுற்றுலா...