×

சென்னையில் இருந்து மதுரை வந்த மூதாட்டி ரயிலில் தூங்கியதால் பாதை மாறி கேரளா சென்றார்

* ஊரடங்கால் மனநல மருத்துவமனையில் சேர்ப்பு
* 80 நாட்களுக்கு பின் மகளிடம் ஒப்படைப்பு

மதுரை: மதுரை, ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (70). இவரது மகள் ஸ்ரீபிரியா. இவர் சென்னையில் உள்ளார். இவரை பார்க்க கஸ்தூரி சென்னை சென்றார். அங்கிருந்து மீண்டும் மார்ச் 18ம் தேதி ரயில் மூலம் மதுரை வந்தார். மதுரைக்கு வரும்போது, இவர் தூங்கிவிட்டார். இதனால் ரயில் கேரள மாநிலம், கொல்லத்திற்கு சென்று விட்டது. அங்கு ரயில் இருந்த அனைவரையும் இறங்க சொல்லி உள்ளனர். அப்போது கஸ்தூரியும் இறங்கியுள்ளார். இறங்கி, ‘இது மதுரை இல்லையே’ என யோசித்தபடி இருந்தவரிடம் கேரள போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். இவருக்கு மலையாள மொழி தெரியவில்லை. விசாரணை நடத்திய போலீசாருக்கு தமிழ் புரியவில்லை. இதையடுத்து அவரை கோழிக்கோடு மனநல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் ஊரடங்கு அமலானதை தொடர்ந்து, பொதுப்போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. குடும்பத்தினர் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. ஊருக்கு சென்ற தனது தாய் கஸ்தூரிக்கு போன் செய்து பார்த்தபோது, தொடர்பு கொள்ள முடியவில்லை. மதுரையில் உள்ள உறவினருக்கு தொடர்பு கொண்டபோது, கஸ்தூரி வரவில்லை என்ற தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீபிரியா தனது தாயை கடந்த 80 நாட்களாக காணாமல் தேடி அலைந்துள்ளார். பின்னர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து ஸ்ரீபிரியாவிற்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் அவரது தாய் கேரளா, கோழிக்கோடு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.ஊரடங்கு காரணமாக அவரை மீட்டு வரமுடியவில்லை.

இதனால் இவரை மீட்டு வர மதுரை கலெக்டர் வினயிடம் ஸ்ரீபிரியா மனு அளித்தார். கோழிக்கோடு கலெக்டரிடம் தொடர்பு கொண்ட மதுரை கலெக்டர், மனநல மருத்துவமனையில் கஸ்தூரி இருப்பதை உறுதி செய்ததுடன், அவரை மீட்டு மதுரை கொண்டு வர, மதுரை ரெட் கிராஸ் அமைப்பிற்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தாய் கஸ்தூரியை மதுரை அழைத்து வந்து, கலெக்டர் முன்னிலையில் மகள் ஸ்ரீபிரியாவிடம் ஒப்படைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை மதுரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் ஜோஸ், கோபாலகிருஷ்ணன், முத்துக்குமார், சேதுக்கரசி செய்து இருந்தனர். பிரியா கூறும்போது, ‘‘நன்றாக இருந்தவரை மனநலம் பாதிக்கபட்டதாகக் கூறி, கேரள மனநல மருத்துவமனையில் 80 நாட்களாக அடைத்து வைத்து இருந்தது மிகப்பெரிய வேதனையாக உள்ளது. இத்தனை நாட்களுக்கு பின்னர் எனது தாயை மீட்டு, என்னிடம் ஒப்படைக்க முயற்சி செய்த கலெக்டருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Tags : Muthatti ,Kerala ,Madurai ,Chennai , Muthatti, Madurai Chennai, fell asleep,train and went to Kerala
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு