×

ஊரடங்கை காரணம் காட்டி சுங்கச்சாவடி கழிவறை, ஓய்வறையை மூடிட்டாங்கய்யா.. மூடிட்டாங்க..: அவசரத்துக்கு ஒதுங்க முடியாமல் நீண்டதூர வாகனஓட்டிகள் கடும் அவதி

சென்னை: கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி சுங்கச்சாவடிகளில் கழிவறை, ஓய்வறை மூடப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய கட்டுப்பாட்டில் 44 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் கார், வேன், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளின் தாகம் தீர்க்கும் வகையில் குடிநீர் வசதி, ஆண்கள், பெண்களுக்காக தனித்தனியே கழிவறை வசதி, வாகன ஓட்டிகளுக்கு ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தர இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. அதன்பேரில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிவறை, ஓய்வறை அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஓய்வறை, கழிவறை நீண்ட தூரம் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்நிலையில்  கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போக்குவரத்துக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. சுங்கச்சாவடிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதே நேரத்தில் அத்தியாவசிய பணி மற்றும் அவசர காரணங்களுக்காக உரிய அனுமதியுடன் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.  சுங்கச்சாவடிகள் மூடப்பட்டதால், கழிவறை வசதி இல்லாமலும், ஓய்வு எடுக்க முடியாமலும், வாகன ஓட்டிகள் தவித்தனர்.இதற்கிடையே, கடந்த ஏப்ரல் 20ம் தேதி முதல் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு, வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநிலத்தில் 8 மண்டலமாக பிரித்து மண்டலங்களுக்குள் வாகனங்கள் செல்ல தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கம் போல் அனைத்து சேவைகளும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுங்கச்சாவடிகளில் கழிவறை, ஓய்வறை இன்னும் மூடியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட தூரம் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து வாகன ஓட்டிகள் சிலர் கூறுகையில், ‘சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சுங்கச்சாவடி கழிவறை, ஓய்வறை மூடப்பட்டுள்ளன. இதனால், வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பெண் பயணிகள் சொல்லெண்ணா துயரத்தில் தவிக்கின்றனர். இதை போக்க, ஓய்வறை, கழிவறைகளை திறக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : restroom , Curfew, toilet toilet, restroom, motor vehicle, avadi
× RELATED பக்தர்களின் வசதிக்காக திருப்பதியில்...