×

75 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் சாப்பிட அனுமதி

சென்னை: தமிழகம் முழுவதும் 75 நாட்களுக்கு பிறகு ஓட்டல்களில் நேற்று முதல் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை 25 சதவீத ஓட்டல்கள் தான் செயல்பட்டன. பல்வேறு விதிமுறைகளுடன் ஜூன் 8ம் தேதி முதல் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட தமிழக அரசு அனுமதி வழங்கியது. குறிப்பாக ஒரு டேபிளில் 2 பேர் மட்டுமே அமர்ந்து சாப்பிடும் வேண்டும். ஒரு டேபிளுக்கும் இன்னொரு டேபிளுக்கும் 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஓட்டல்களை அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இதனை ஓட்டல் உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன்படி நேற்று முதல் தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

வாடிக்கையாளர்கள் கடும் சோதனைக்கு பிறகே ஓட்டலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வழக்கமாக ஓட்டல்களில் சாப்பிட கூட்டம் அலைமோதும்.
ஆனால் நேற்று வழக்கத்தை விட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. ெபரும்பாலோனார் ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடுவதற்கு பதிலாக பார்சல்களை வாங்கி சென்ற காட்சியை காண முடிந்தது. சில ஓட்டல்களில் வழக்கம் போல் பார்சல்கள் தான் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் சாப்பிட அனுமதிக்கப்படவில்லை.

இது குறித்து தமிழ்நாடு ஓட்டல் சங்க தலைவர் வெங்கடசுப்பு கூறியதாவது: தமிழகத்தில் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் 75 சதவீத ஓட்டல்கள் இயங்கின. சென்னையில் மட்டும் 25 சதவீதம் ஓட்டல்கள் தான் இயங்கின.நேற்று ஓட்டல்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது. பெரும்பாலும் காலை 6 மணிக்கு ஓட்டல் திறக்கப்பட்டால் 10 மணி வரை கூட்டம் கணிசமாக இருக்கும். ஆனால், நேற்று கூட்டம் அவ்வளவாக இல்லை. கடைகளில் அமர்ந்து சாப்பிட இரவு 8 மணி வரை வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு 9 மணி வரை பார்சல் மட்டுமே வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : hotels ,Tamil Nadu ,Tamilnadu , Tamilnadu, hotels, sanction
× RELATED சென்னையில் ஹோட்டல்களில் அமர்ந்து...