×

உதவித்தொகை வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

ஆவடி: ஆவடி அடுத்த திருநின்றவூர், பட்டாபிராம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் மின்சார ரயில், பஸ்களில்  வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக ரயில், பஸ் போக்குவரத்து இயங்காததால், அவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கினர். இவர்களுக்கு ஆரம்பத்தில் தன்னார்வலர்கள் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வந்தனர். பின்னர், படிப்படியாக அவர்களும் உதவிகளை வழங்குவதை கைவிட்டனர். இதனால் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வீட்டு வாடகை, சாப்பாடு செலவு உள்ளிட்டவைகளுக்கு பணம் இன்றி தவித்தனர்.

இதனையடுத்து, அவர்கள் மற்ற மாநிலங்களை போல, தமிழக அரசும் நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை திருநின்றவூர், காந்திசிலை அருகே சி.டி.எச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து, ஆவடி தாசில்தார் சங்கிலிரதி, பட்டாபிராம் போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசன், திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளிடம்  பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், மாவட்ட நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Scholarships, Alternatives, Pickles
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...