×

மியான்தத் போல் சிறந்த வீரர் கோஹ்லி...:சோகைல் பாராட்டு

லாகூர்: பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத் போல்  விராட் கோஹ்லியும்  சிறந்த வீரராக திகழ்கிறார் என்று முன்னாள் வீரர் அமீர் சோகைல் பாராட்டி உள்ளார். கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி. தனது அதிரடி ஆட்டங்களால் எல்லோரையும் ஈர்க்கும் கோஹ்லியை மற்ற வீரர்களுடன் ஒப்பிட்டு புகழ்வது கிரிக்கெட் பிரபலங்களின் வாடிக்கையாகி வருகிறது. அதிலும் இந்த ஊரடங்கு நேரத்தில் வீட்டில் சும்மா இருக்கும் வீரர்கள், முன்னாள் நட்சத்திரங்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். இந்தப் பட்டியலில் புதிதாக சேர்ந்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அமீர் சோகைல்.
அவர் சமூக ஊடகமொன்றில் வெளியிட்ட வீடியோவில் கூறி இருப்பதாவது: கிரிக்கெட்டில் பெரிய வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களை தனித்தனியாக பார்க்கும்போது அவர்கள் சிறந்த வீரர்கள். ஆனால் அவர்களின் மகத்துவம் அணிக்கோ, அணியின் வெற்றிக்கோ உதவாது. இது எல்லா அணிகளுக்கும் பொருந்தும். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வரலாறு மற்றும் அதன் மகத்துவத்தை பற்றி நீங்கள் பேசினால் நினைவுக்கு வரும் முதல் பெயர் ஜாவேத் மியான்தத். அவர் கிரிக்கெட்டில் நிகழ்த்திய அற்புதங்கள் இன்று வரை பேசப்படுகிறது. அவர் அணியில் உள்ள மற்ற வீரர்களின் ஆட்டத்தையும் மேம்படுத்துவார்.

நீங்கள் அவருடன் இணை சேர்ந்து நீண்ட நேரம் விளையாடினால் நிறைய கற்றுக் கொள்ள முடியும். உங்களை மேம்படுத்திக்கொள்ள அவர் முன்மாதிரியாக இருப்பார். அப்படி மியான்தத் செய்ததைதான் இன்று கோஹ்லி இந்திய அணிக்காக செய்கிறார். ஒவ்வொரு வீரரும் அவருடன் சேர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளனர். அதனால்தான் அவரை மியான்தத் போல் சிறந்த வீரர் என்று சொல்கிறேன். கோஹ்லி சுறுசுறுப்பானவர் மட்டுமல்ல, களத்தில் ஆக்ரோஷமானவர். அணியின் மேம்பாட்டுக்காக உழைப்பவர். அதனால்தான் அவரை மியான்தத் போன்று அற்புதமான வீரர் என்று சொல்கிறனே். தனிப்பட்ட வாழ்க்கைக்கும், விளையாட்டு வாழ்க்கைக்குமான வித்தியாசத்தை உணர்வதிலும், அவற்றை தனித்தனியாக கையாளுவதிலும் அவர் சிறப்பானவர் என்பதை உணர்த்துகிறார். இவ்வாறு சோகைல் பாராட்டி உள்ளார்.

Tags : Kohli ,Miandad , Kohli ,best player, Miandad
× RELATED விராட் கோலி முன்னின்று அணியை...