×

மருத்துவமனை படுக்கைகள் குறித்து தொடர் புகார்; மருத்துவமனைகளின் வசதிகளை அறிய Stop Corona என்ற இணையதளத்தை உருவாக்கியது தமிழக அரசு

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மே 7ம் தேதி வரை சென்னையில் 22 ஆயிரத்து 149 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களை தவிர 10 ஆயிரத்து 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 270 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.06 சதவீதம் ஆண்கள், 39.93 சதவீதம் பெண்களும், உள்ளனர்.

இதனால் சென்னையில் உள்ள அரசு மற்றும் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. எங்கும் படுக்கை வசதி இல்லை என்ற புகார்கள் பெருகி வருகின்றன. சென்னையில் உள்ள அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ளிட்ட 4 அரசு மருத்துவமனைகளில் 1750 படுக்கைகள் உள்ளன. 26 தனியார் மருத்துவமனைகளில் 1,500க்கு மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இதைத்தவிர்த்து சென்னை மாநகராட்சி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை, சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் மையங்கள் ஆகியவற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த படுக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டதாவும், புதிதாக யாரையும் சேர்ப்பதும் இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உள்ளதாக பலர் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். எனவே, சென்னையில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கோவிட் மையங்களில் உள்ள மொத்த படுக்கை வசதி எவ்வளவு, எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் உள்ளிட்ட தகவல்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும்.  சம்பந்தப்பட்ட மருத்துவமனையை தொடர்பு கொள்வதற்கு அனைத்து மருத்துமனையிலும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் உள்ள வசதிகளை அறிய Stop Corona என்ற இணையதளத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. Stop Corona என்ற இணையதளத்தில், மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகள் எண்ணிக்கையையும் அறியலாம். படுக்கைகள் எண்ணிக்கை, உள்நோயாளிகள் எண்ணிக்கையை அறியலாம் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : Government of Tamil Nadu ,Stop Corona ,hospitals ,facilities , A series of complaints about hospital beds; The Government of Tamil Nadu has developed a website called Stop Corona to provide facilities to hospitals
× RELATED ஐ-லீக் தொடரில் புதிய கிளப் அறிமுகம்