×

சென்னையில் இருந்து மதுரை வந்தபோது ரயிலில் தூங்கியதால் கேரளா சென்ற மூதாட்டி மருத்துவமனையில் சேர்ப்பு: 80 நாட்களுக்கு பின் மகளிடம் ஒப்படைப்பு

மதுரை:  மதுரை, ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (70). இவரது மகள் பிரியா. இவர் சென்னையில் உள்ளார். இவரை பார்க்க கஸ்தூரி சென்னை சென்றார். அங்கிருந்து மீண்டும் மார்ச் 18ம் தேதி ரயிலில் மதுரை புறப்பட்டார். மதுரை வந்தபோது, இவர் தூங்கிவிட்டார். இதனால் ரயில் கேரள மாநிலம், கொல்லத்திற்கு சென்று விட்டது. அங்கு அனைவரையும் இறங்க சொல்லி உள்ளனர். அப்போது கஸ்தூரியும் இறங்கி ‘இது மதுரை இல்லையே’ எணன திைகத்தபடி நின்றுள்ளார். அவரிடம் கேரள போலீசார்  விசாரித்தனர். இவருக்கு மலையாளம் தெரியவில்லை. போலீசாருக்கு தமிழ் புரியவில்லை. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று முதலில் துவங்கியதால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதையடுத்து மூதாட்டியை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக்கூறி மனநல மருத்துவமனையில் போலீசார் சேர்த்து விட்டனர்.

பிரியா, தாயை கடந்த 80 நாட்களாக தேடி அலைந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பிரியாவிற்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் அவரது தாய் கேரளா,  கோழிக்கோடு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. தாயை மீட்டு வர மதுரை கலெக்டர் வினயிடம் ஸ்ரீபிரியா மனு அளித்தார். கோழிக்கோடு கலெக்டரிடம் மதுரை கலெக்டர்  தொடர்பு கொண்டார். அதன்பேரில் கஸ்தூரியை மதுரை அழைத்து வந்து, கலெக்டர் முன்னிலையில் மகள் பிரியாவிடம் ஒப்படைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை மதுரை ரெட் கிராஸ் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
பிரியா கூறும்போது, ‘‘நன்றாக இருந்தவரை மனநலம் பாதிக்கபட்டதாகக் கூறி,  கேரள மனநல மருத்துவமனையில் 80 நாட்களாக அடைத்து வைத்தது மிகப்பெரிய வேதனையாக உள்ளது’’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Tags : Chennai Chennai ,hospital ,women ,Madurai ,Kerala , Chennai, Kerala,elder women , Hospital, handover
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...