×

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தேவகவுடாவுக்கு காங்கிரஸ் ஆதரவு: இன்று மனுதாக்கல் செய்கிறார்

பெங்களூரு: மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள கர்நாடக மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரான முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா இன்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார். மாநில சட்டப்பேரவையில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜுகவுடா, பி.கே.ஹரிபிரசாத், பாஜ கட்சியின் பிரபாகர்கோரே மற்றும் மஜதவின் குபேந்திரரெட்டி ஆகிய நான்கு ேபரின் பதவி காலம் இம்மாதம் முடிகிறது. காலியாகும் இப்பதவிக்கு ஜூன் 19ம் தேதி தேர்தல் நடத்துவதாக கடந்த மாதம் 30ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதை தொடர்ந்து கடந்த 1ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

சட்டப்பேரவையில் தற்போதுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆளும் பாஜ சார்பில் இருவர், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் சார்பில் ஒருவரை சுலபமாக தேர்ந்தெடுக்க முடியும். பாஜ சார்பில் மூன்றாவது வேட்பாளரை நிறுத்தினால் காங்கிரஸ் மற்றும் மஜத ஆதரவை பெற வேண்டும். காங்கிரஸ் இரண்டாவது வேட்பாளரை நிறுத்தினால் மஜத ஆதரவை பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவை வேட்பாளராக நிறுத்துவதாக அக்கட்சியின் தேசிய தலைவர் ேசானியாகாந்தி கடந்த சனிக்கிழமை அறிவித்தார். அதன்படி நேற்று பெங்களூரு விதானசவுதாவில் சட்டப்பேரவை செயலாளரும் தேர்தல் அதிகாரியுமான எம்.விசாலாட்சியிடம் மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்தார்.  

மாநில சட்டப்பேரவையில் மஜதவுக்கு போதிய பலமில்லாமல் இருப்பதால், அக்கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்துவது குறித்து யோசிக்கப்பட்டது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமில்லாமல் ஆளும் பாஜ எம்எல்ஏக்களின் ஒத்துழைப்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தேவகவுடா, தேர்தலில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் நாளை (இன்று) காலை மனு தாக்கல் செய்வதாக மஜத மாநில தலைவர் எச்.கே.குமாரசாமி தனது டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். பாஜ சார்பில் பெலகாவி ஈரண்ணா கடாடி மற்றும் ரெய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அசோக் கஸ்தி ஆகியோரின் பெயர்அறிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் இன்று கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் தலைமையில் முதல்வர் எடியூரப்பா உள்பட மத்திய, மாநில அமைச்சர்கள் முன்னிலையில் மனு தாக்கல் செய்கிறார்கள்.  வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.


Tags : Congress ,Devakauda ,state elections ,elections ,Rajya Sabha , Rajya Sabha elections, Devakauda, Congress, support
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...