வாய், வயிற்றில் காயங்களுடன் இறந்த காட்டு யானை: மலப்புரம் அருகே மீண்டும் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் தேங்காயில் வெடிவைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய அலை அடங்கும் முன்பு, மலப்புரத்தில் மேலும் ஒரு யானை வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் இறந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் அருகே பன்றிகளை வேட்டையாட வைத்த தேங்காய் வெடியை சாப்பிட முயன்ற கர்ப்பிணி யானை வாய் சிதறி, பல நாள் தவித்து பலியானது. இதில் வெடி செய்து கொடுத்த மலப்புரம் எடவண்ணா பகுதியைச் சேர்ந்த வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டார். வெடியை வைத்த தோட்ட உரிமையாளர்கள் அப்துல் கரீம் மற்றும் அவரது மகன் ரியாசுதீன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மலப்புரம் மாவட்ட வனப்பகுதியில் வாய் மற்றும் வயிற்றில் காயங்களுடன் காட்டு யானை ஒன்று இறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலப்புரம் மாவட்டம் கருவாரக்குண்டு வனத்தை ஒட்டிய பகுதி. கடந்த வாரம் இப்பகுதியில் ஒரு காட்டு யானை ஊருக்குள் வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்து அதை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்கிருந்து செல்ல மறுத்தது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து யானையை காட்டுக்குள் விரட்ட முயற்சித்தனர். ஆனால் அது காட்டுக்குள் செல்லாமல் அடம்பிடித்தது.

இதையடுத்து வனத்துறையினர் அதை கூர்ந்து கவனித்தபோது வாய் மற்றும் வயிற்றில் காயங்கள் காணப்பட்டன. இதையடுத்து யானைக்கு வனத்துறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டது. நேற்று முன்தினம் முதல் யானை தண்ணீர் குடிக்க தொடங்கியது. இந்த நிலையில் நேற்று காலை அந்த யானை நின்று கொண்டிருந்த இடத்திலேயே இறந்து கிடந்தது. யானை எப்படி இறந்தது என்பது பற்றி வனத்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

Related Stories: