விவிஐபி பயணத்துக்கான போயிங் 777 விமானங்கள் செப்டம்பரில் இந்தியா வருகை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திரமோடி மற்றும் உயர் அதிகாரிகளின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டுள்ள 2 போயிங் 777 விமானங்கள் செப்டம்பரில் இந்தியா வரும் என மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப 2 நாள் பயணமாக இந்தியா வந்தார். அப்போது இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. இதில் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உயர் பிரமுகர்கள் பயன்பாட்டிற்காக போயிங் நிறுவனத்திடம் இருந்து இரண்டு போயிங் 777 என்ற விவிஐபி விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விமானங்கள் ஜூலை மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என கடந்த அக்டோபரில் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நீடித்து வரும் கொரோனா நோய் தொற்று மற்றும் அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் காரணமாக போயிங் 777 விமானம் இந்தியா வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. செப்டம்பரில் போயிங் 777 விமானங்கள் இந்தியா வரும் என அரசு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த போயிங் 777 விமானங்களை இந்திய விமானப் படை விமானிகள் தான் இயக்குவார்கள். ஏர் இந்தியா விமானிகள் இந்த விமானங்களை இயக்க மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி உள்ளிட்டோர் பி747 விமானங்களை தான் பயணத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஏர் இந்தியா விமானிகள் பயணிப்பர். மற்ற நேரங்களில் இந்த விமானங்கள் வர்த்தக ரீதியிலான நடைமுறைக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும்.

Related Stories: