×

இந்தியா-சீனா எல்லை பிரச்சனை; லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதா?; காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கின் பான்காங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தவுலத் பெக் ஓல்டி எல்லை பகுதிகளில் சீனப் படைகள் ஊடுருவியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவமும் அங்கு வீரர்களை குவித்தது. இதனால், அப்பகுதிகளில்  பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை சுமூகமாக பேசி தீர்த்து கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்தன.அதன்படி, கடந்த 6-ம் தேதி லடாக்கில் சீனாவின் எல்லைக்குட்பட்ட மால்டோ பகுதியில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா  தரப்பில் லே 14வது பகுதி தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங்கும், சீன தரப்பில் திபெத்தின் ராணுவத் தளபதியும் பங்கேற்றனர்.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் வகையில், இப்பிரச்னையில் விரைவில் சுமூகமான தீர்வு காண இரு தரப்பும் ஒப்புக்  கொண்டன. இந்தியா, சீனா தலைவர்களிடையே ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் எல்லைப் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தியா, சீனா இடையேயான நட்புறவு தொடங்கி 70வது ஆண்டுகள் ஆகிறது என்பதை நினைவில் கொண்டு, ராணுவ தரப்பிலும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தையின் மூலம் விரைவில் தீர்வு காணவும் எல்லைப் பகுதியில் அமைதியை  நிலைநாட்டவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன என்று கூறப்பட்டது.

இதற்கிடையே, நாடுகளின் எல்லைகளை பாதுகாப்பதில் அமெரிக்கா, இஸ்‌ரேலுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதை உலக நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகள் உலக அளவில் ஏற்றுக்  கொள்ளப்பட்டுள்ளன’’ என்று நேற்று முன்தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார்.

இதனையடுத்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், எல்லையில் உண்மையில் என்ன நடக்கிறது என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக  வைத்திருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணம் மேலானது’’ என்றுக் கூறி, அத்துடன் உருது கவிஞர் மிர்சா காலிப்பின் கவிதையில் இரண்டு வரிகளையும் இணைத்து பதிவிட்டுள்ளார். இந்நிலையில், லடாக்கில் உள்ள இந்திய பகுதிகளை சீனா  ஆக்கிரமித்துள்ளதா? என்றும் இது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் பதிலளிப்பாரா? என தனது டுவிட்டரில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags : Rahul Gandhi Dwight ,China ,India ,Ladakh , India-China border problem; Did China Occupy Indian Territories in Ladakh ?; Cong. Former President Rahul Gandhi Dwight
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...