×

தண்டையார்பேட்டை மண்டலத்தில் நோய் தடுப்பு பணிகள் சுணக்கம்: மக்கள் சரமாரி குற்றச்சாட்டு

பெரம்பூர்: சென்னையில் தண்டையார்பேட்டை மண்டலம் கொரோனா பாதிப்பு  எண்ணிக்கையில் 2வது இடத்தில் உள்ளது. இங்குள்ள கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்கேபி நகர் ஆகிய 3 பகுதிகளை மண்டல அதிகாரிகள் சரிவர கண்டுகொள்ளாததால், நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது.
 குறிப்பாக, கொடுங்கையூர் பகுதியில் 350க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எம்கேபி நகர் பகுதியில் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், வியாசர்பாடி  பகுதியில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட பகுதிகளில் பாதிப்பு அதிகளவில் இருந்தாலும் மண்டல அலுவலகம் தண்டையார்பேட்டை பகுதியில் உள்ளதால் அதிகாரிகள் இங்கு நேரில் வந்து ஆய்வு செய்து, சுகாதார பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக இந்த பகுதிகளில் ஒரு வீட்டில் ஒருவருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டால், அந்த வீட்டிலுள்ள அனைவருக்கும் கொரானா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பிசிஆர் எனப்படும் பரிசோதனை கருவிகள் குறைவாக உள்ளதால்  குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் குடும்பத்தில் வேறு யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் குடும்பத்தில் ஒருவருக்கு அறிகுறி ஏற்பட்டால், 4 நாட்கள் கழித்து மற்றொரு நபருக்கு அறிகுறி தெரிய வருகிறது. அதற்குள் அந்த நபர் அந்த பகுதியில் பல்வேறு இடங்களுக்கு செல்கிறார். எனவே தொற்று மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முறையாக தனிமைப்படுத்துவதை ஆரம்பத்திலேயே  செய்திருந்தால் தண்டையார்பேட்டை மண்டலத்தில் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது, என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மேலும் இந்த மண்டலத்தில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 15க்கும் மேற்பட்டோர் கொடுங்கையூர்  பகுதியைச் சேர்ந்தவர்கள். எனவே, கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்கேபி நகர் ஆகிய பகுதிகளை மண்டல அதிகாரிகள் புறக்கணிக்காமல் நோய் தடுப்பு பணிகளை முறையாக செய்ய வேண்டும், கூடுதல் பணியாளர்களை நியமித்து போர்க்கால அடிப்படையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பற்றாக்குறை
தண்டையார்பேட்டை மண்டலத்தில் சுகாதார ஆய்வாளர்கள் பற்றாக்குறையாக உள்ளதால் கொடுங்கையூர், வியாசர்பாடி மற்றும் எம்கேபி நகர் பகுதிகளில் சுகாதார பணிகளை சரிவர மேற்கொள்ள முடிவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே  ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் இந்த பகுதியில் முகாமிட்டு நிலைமையை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Pandemonium ,Thunderbird Zone tandaiyarpettai , tandaiyarpettai , Pandemonium, immunizations, people, charge
× RELATED வேட்பாளர் முன்னிலையில் அதிமுகவினர்...