×

கொரோனாவால் ரூ.30 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு பத்திரிகை, தொலைக்காட்சிகள் தத்தளிப்பு

* ஆட்டம் காண வைத்த பொருளாதார மந்தநிலை
* மத்திய, மாநில அரசுகள் உதவ கோரிக்கை

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக  பத்திரிகை, தொலைக்காட்சி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய ஊடகத்துறை சுமார் 30,000 கோடி ரூபாய்  வருவாய் இழப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. ‘மையில் நனைத்து பேப்பரில் அடிச்சா மறுத்து பேச ஆளில்லை’ என்ற திரைப்பட பாடல் வரி  செய்தித்தாள் ஊடகத்தின் வலிமையை பறைசாற்றும். அத்தனை வரவேற்பு, உறுதியோடு இருந்த அச்சு ஊடகங்களை கொரோனா தொற்று அசைத்து பார்த்துவிட்டது.

செய்தியாளர்கள், துணை ஆசிரியர்கள், புகைப்படக் கலைஞர்கள், விளம்பரப் பிரிவு, விற்பனைப் பிரிவு ஊழியர்கள் என நேரடியாகவும்; முகவர்கள், விற்பனையாளர்கள் என  மறைமுகமாகவும் நாடு முழுவதும் சுமார் 35 லட்சம் பேர் அச்சு ஊடகத்துறையை நம்பி வாழ்கின்றனர். இவர்களை தவிர செய்தி, பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை தனி. ஏற்கெனவே பண மதிப்பு நீக்கம், அச்சு காகிதங்களின் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி உயர்வு, இறக்குமதி செய்யப்படும் அச்சு காகிதங்களுக்கான வரி அதிகரிப்பு என்று  லேசாகத் தள்ளாட ஆரம்பித்த  செய்தித்தாள் உள்ளிட்ட  அச்சு ஊடகங்களை, இப்போது கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை மேலும் ஆட்டம் காண வைத்துள்ளது.வணிக நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக மூடியிருந்ததால் விளம்பர வருவாயில் பாதிப்பு, மக்கள் வீட்டுக்குள் முடங்கியிருந்ததால் விற்பனையில் பாதிப்பு என்று  செய்தித்தாள் நிறுவனங்கள் இரண்டு பக்க நெருக்கடியால் திணறிக்கொண்டிருக்கின்றன. நெருக்கடியை சமாளிக்க முடியாமல்.  சில பத்திரிகைகள் தங்கள் பதிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. ஆனால் அதுமட்டும் போதுமானதாக இல்லை.  பத்திரிகைகளின் ஆதரவுக்கரமாக இருக்கும் விளம்பர வருவாய், கொரோனாவால் அதலபாதாளத்துக்கு சரிந்து வருவதுதான் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

அச்சுப்பத்திரிகைகள் மட்டுமின்றி, இன்று  தொலைக்காட்சி நிறுவனங்களும் கொரோனா பீதியால் பிரச்னையில் சிக்கிக் கிடக்கின்றன. பெரும்பான்மையான செய்தி, பொழுதுபோக்கு தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊரடங்கு காரணமாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்த நிகழ்ச்சிகளை நிறுத்தி விட்டன. வேறு வழியில்லாமல் பழைய நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்வதால், விளம்பர வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொலைக்காட்சிகளின் மொத்த வருவாயில் 45 சதவீதம் விளம்பரங்கள் மூலமாகவும், 55 சதவீதம் வாடிக்கையாளர்களின் சந்தா மூலமாகவும் கிடைத்து வந்தன. இப்போது கொரோனாவால்  விளம்பர வருவாய் 20 சதவீதம் வரையிலும், சந்தா வருவாய் 15 சதவீதம் வரையிலும் பாதித்துள்ளதாக சொல்கிறார்கள். ஊரடங்கு தொடங்கிய முதல் 2 வாரங்களில் மட்டுமே ஊடகங்களுக்கு  சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் பெரும்பான்மையான தொடர்களின் நிறுவனங்கள், வங்கிகள், தனியாரிடம் வட்டிக்கு கடன் வாங்கிதான் காலத்தை தள்ளிக் கொண்டு இருந்தன. கொரோனாவால் வருவாயும் இழந்து, வட்டியும் கட்ட முடியாமல் பரிதவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  இப்போதுதான் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு உட்பட பல்வேறு மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. அதிலும் 60  நடிகர்கள், ஊழியர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்.

அதனால் தொடர்களின் படப்பிடிப்பு இன்னும் வேகம் பெறவில்லை. மேலும், தொடர்களில் மொழிமாற்ற வருவாயை கருத்தில் கொண்டு பெரும்பாலும் வெளி மாநில நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். ஊரடங்கால் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டனர். அவர்கள் திரும்ப வர முடியாததால் அரசு அனுமதி கிடைத்தும் பல தொடர்களின் படப்பிடிப்பு தொடங்கவே இல்லை. இந்த பிரச்னைகள் தற்காலிகமானதாக தெரியவில்லை. அதனால் ‘அச்சு, மின்னணு ஊடகங்களின் நிலைமை கொரோனாவுக்கு பிறகும் எளிதில் மீண்டு விடாது. கொரோனா போனாலும் பிரச்னை இருக்கும். அவற்றை சமாளிக்க நீண்ட நாட்கள் ஆகும். எனவே மத்திய, மாநில அரசுகளின், பொதுமக்களின் ஆதரவு அவசியம்’ என்பது வல்லுநர்களின் கருத்து. மத்திய, மாநில அரசுகள் இதுவரை அச்சு ஊடகங்களுக்கு தர வேண்டிய விளம்பரக் கட்டண பாக்கி 1500 கோடி ரூபாய்.  அதனுடன் விளம்பர வருவாய் இழப்பு, சந்தா பாதிப்பு என ஊடகங்களுக்கு இதுவரை கொரோனாவால் ஒட்டுமொத்தமாக சுமார் 25 ஆயிரம் முதல் 30ஆயிரம்  கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.   ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக திகழும் பத்திரிகை துறை, எத்தனை பேரிடர்கள் வந்தபோதும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்துள்ளது. அதேபோல்தான் மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினரை போல ஊடகத்துறையினரும் கொரோனா பீதிக்கு இடையில் பணிபுரிந்து, மக்களுக்கு உண்மையான நிலவரங்களை பகிர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்திக்  கொண்டுதான் இருக்கின்றனர். எனவே பிரதமர், அந்தந்த மாநில முதல்வர்கள் ஆகியோர் இ்ந்த பிரச்னையில் தலையிட்டு, ஊடகத்துறையை காக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. விளம்பர கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

நலிவை நோக்கி நகரும் பத்திரிகைத் துறையை காப்பாற்ற தமிழகத்தில் ஊடகங்களின் நிர்வாகிகள் நேரடியாக களமிறங்கியுள்ளனர். மாநிலத்தில் உள்ள பல்வேறு அச்சு ஊடகங்களின் நிர்வாகிகள், ‘செய்தித்தாள் அச்சிடுவதற்கான அச்சு காகிதத்தின் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும். அச்சு ஊடகங்களில் வெளியிடப்பட்ட மத்திய, மாநில அரசுகளின் விளம்பரங்களுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஊடகங்களில் விளம்பரக் கட்டணத்தை 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும்’ என பல்வேறு கோரிக்கைகளை பிரதமர், முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளனர். கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையிலும், இந்த கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் படி  தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் கட்சித் தலைவர்களை நேரிலேயே சந்தித்து வலியுறுத்தி உள்ளனர். எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் பத்திரிகைகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும்படி மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Corona ,Rs. Corona ,loss ,Rs , Corona's ,loss ,Rs.30 cores
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...