×

இன்றைய நிலவரப்படி 101.700 அடி; மேட்டூர் அணையின் நீர்மட்டம் 300 நாட்களுக்கு மேலாக 100 அடியாக நீடிப்பு...விவசாயிகள் மகிழ்ச்சி.!!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 300 நாட்களுக்கும் மேலாக 100 அடிக்கு குறையாமல் இருப்பதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர் உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெருகிறது. இதன்படி, மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு குறைவாக இருந்தால் பருவமழை எதிர்நோக்கி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். நடப்பாண்டு ஜனவரி 28ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

கடந்தாண்டு டெல்டா பாசனத்திற்கு 151 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆகஸ்ட் 13ம் தேதி முதல் இன்று வரை தொடர்ந்து 302வது நாளாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. கடந்த 2005, 2006ம் ஆண்டில் தொடர்ந்து 427 நாட்கள் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 14 ஆண்டுகளுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் தற்போது 302 நாட்களாக குறையாமல் இருப்பது காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008ம் ஆண்டு குறித்த நாளான ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 11 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பாண்டில் குறித்த நாளில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும், அதிகரிப் பதுமாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி, மேட்டூர் அணையில் 1740 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1451 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 101.700 அடி, நீர்இருப்பு 67.063 டி.எம்..சி. ஆக உள்ளது, குடிநீர் பயன்பாட்டிற்காக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Mettur Dam , As of today, 101.700 feet; Mettur Dam extends 100 feet over 300 days: Farmers' delight
× RELATED டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் அரசுக்கு எடப்பாடி கோரிக்கை