×

வரும் நாட்களில் கொரோனா 2 லட்சமாக இருக்கும்...! 10-ம் வகுப்பு தேர்வு நடத்த இதுதான் சரியான நேரம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்ட நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஜூன் மாதம் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தல்களுக்கு இடையே தேர்வு நடைபெற இருப்பதால் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் எனக்கூறியும், மேலும் 2 மாதகாலத்திற்கு ஒத்திவைக்கவேண்டும் எனக் கோரி உயர்நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. தேர்வினை ரத்து செய்யவேண்டும் எனவும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று நீதிபதி வினித் கோத்தாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த, வழக்கை இன்று காலை விசாரித்த நிலையில், மதியம் வழக்கு ஒத்திவைக்கப்பட்டநிலையில்,  தற்போது விசாரணை மீண்டும் தொடங்கியது. உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் விளக்கம்

இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜரானார். அப்போது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த இதுவே சரியான நேரம் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக தலைமை வழக்கறிஞர் வாதம் செய்து வருகிறார். நிபுணர்களின் கருத்துப்படி தமிழகத்தில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.  அக்டோபர்-நவம்பரில் கொரோனா தாக்கம் அதிகமடையும்.

மற்ற மாநிலங்களில் 10ம் வகுப்பு தேர்வை நடத்தி முடித்து விட்டன. மத்திய அரசு தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது என்றும் தமிழகத்தை தேர்வை நடத்த ஐகோர்ட் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள நடைமுறைகள் பின்பற்றப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது. தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளித்தல், மாணவர்களுக்கு கவசம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்படும். பின்னாளில் தேர்வு நடத்துவது ஆபத்தானதாக இருக்கும்.

நீதிபதிகள் கேள்வி

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் 10ம் வகுப்பு தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன்? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினர். ஜூன் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த அனுமதிக்க முடியாது என்று அதிரடியாக கூறியுள்ளனர். மேலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூலையில் நடத்தலாமா? என்பது குறித்து இன்று பிற்பகல் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். பொதுத்தேர்வு வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 9 லட்சம் மாணவர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் குறித்து அரசுக்கு கவலை இல்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். மாணவர் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதை தவிர வேறு என்ன உத்தரவாதம்?. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை உடனே நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை.


Tags : Corona ,government ,Tamil Nadu ,Supreme Court , Corona, Elect, Government of Tamil Nadu
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...