×

தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்

சென்னை: வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்றால் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசம் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் இன்று கூறியதாவது; தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழகத்தின் ஏனைய பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்யகூடும். சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில், அதிகபட்சமாக 38 டிகிரி, குறைந்தபட்ச  29 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும். வங்க கடலில் இன்று உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை, நாளை உருவாகக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஜூன் 9 ம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, வங்கக் கடல், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலை 3 முதல் 3.4 மீட்டர் வரை குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை ஒரு சில நேரங்களில் எழக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Meteorological Center ,Southwestern , Southwest Monsoon, Rain, Meteorological Center
× RELATED வங்கக் கடலில் காற்றழுத்த...