×

ஆண்டிபட்டி பகுதி நெசவாளர்கள் பரிதவிப்பு ரூ.10 கோடி காட்டன் சேலைகள் தேக்கம்: சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

ஆண்டிபட்டி: கொரோனா ஊரடங்கால் போதிய ஆர்டர்கள் இன்றி ஆண்டிபட்டி பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான காட்டன் சேலை மற்றும் வேட்டிகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றை சந்தைப்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், சண்முகசுந்தராபுரம், கொப்பையம்பட்டி, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய ஊர்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு சுங்குடி, செட்டிநாடு, பேப்பர், காரைக்குடி, கோடம்பாக்கம் ஆகிய காட்டன் வகை சேலைகளும், வெள்ளை மற்றும் வண்ண நிறத்தில் வேட்டிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.  தினசரி ரூ.25 லட்சம் முதல் ரூ.30 லட்சம் மதிப்பிலான சேலை மற்றும் வேட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மதுரை, விருதுநகர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, குஜராத், கேரளா ஆகிய வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கோடை காலத்தில் காட்டன் சேலை விற்பனை அதிகமாக இருக்கும் என இந்தாண்டு தொடக்கத்தில் சேலைகளை அதிகமாக உற்பத்தி செய்து இருப்பு வைத்தனர். ஆனால், கொரோனா ஊரடங்கால் ஆர்டர் வரவில்லை. நெசவுக்கூடங்களும் 2 மாதமாக மூடிக் கிடந்தன. தற்போது ஊரடங்கு தளர்வு பிறப்பிக்கப்பட்டும், போதுமான ஆர்டர் வரவில்லை. இதனால், 30 சதவீத உற்பத்தியே நடைபெறுகிறது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நெசவாளர்களும் வருவாயின்றி பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து சக்கம்பட்டி நெசவாளர் சுந்தர் கூறுகையில், ‘‘ஒவ்வொரு விசைத்தறி கூடத்திலும் ரூ.20 முதல் ரூ.30 லட்சம் மதிப்பிலான உற்பத்தி பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் ஒட்டுமொத்தமாக ரூ.10 கோடி மதிப்பிலான சேலை, வேட்டிகள் தேக்கமடைந்துள்ளன. இவற்றை சந்தைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.


Tags : area weavers ,area ,Antipatti , Antipatti area, weavers, Rs 10 crore Cotton, sarees
× RELATED ஆண்டிப்பட்டி மேகமலை அருவியில் திடீர்...