×

குமரி மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு: வசூல் வேட்டையில் தனியார் மருந்தகங்கள்

மார்த்தாண்டம்: குமரி கால்நடை மருத்துவமனைகளில் கோமாரி நோய் தவிர இதர நோய்களுக்கான மருந்துகள் இருப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மண்டலத்தில் 30 கால் நடை மருத்துவமனைகளும், தக்கலை மண்டலத்தில் 29 கால்நடை மருத்துவ மனைகளும் உள்ளன. இந்த மருத்துவமனைகள் மூலம் கால்நடைகளுக்கான சிகிச்சைகளுடன் பசுக்களுக்கு செயற்கை கருவூட்டல் மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. குமரியில் தற்போது சுமார் 2 லட்சம் மாடுகள் உள்ளன. ஆனால் தற்போது  மாடுகளுக்கு கோமாரி நோய்க்கான மருந்துகள் தவிர இதர நோய்களுக்கான மருந்துகள் இல்லை. இதேபோல்  குமரியில் பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய்  வளர்க்கப்படுகிறது.  இந்த நாய்களுக்கு  குறிப்பிட்ட இடைவெளியில் ரேபீஸ்  உள்பட பல்வேறு தடுப்பு ஊசி  போட வேண்டியது கட்டாயமாகும்.

ஆனால் அரசு  மருத்துவ மனைகளில் நாய்களுக்கான  தடுப்பூசி மருந்துகள் பல ஆண்டுகளாக இருப்பு  இல்லை. இதனால் மருத்துவர்கள் தனியார்  மருந்து கடைகளில் ரேபிஸ் உள்ளிட்ட  மருந்துகளை  வாங்கி வருமாறு அறிவுறுத்துகின்றனர். இந்த   மருந்துகளின் விலை அதிகமாக உள்ளதால்   வசதி படைத்தவர்கள் வாங்கி    விடுகின்றனர். ஆனால் நடுத்தர மக்கள் பணமின்மையால் தங்களது செல்ல  பிராணிகளுக்கு  ஊசி போடாமல் பிறகு பார்த்து கொள்ளலாம் என்று திருப்பி  அழைத்து சென்று  விடுகின்றனர். இதேபோல் ஆடுகள் உள்ளிட்ட ,இதர  கால்நடைகளுக்கும் தடுப்பு ஊசிமற்றும் எந்த நோய்க்கான  மருந்துகளும் இருப்பு  இல்லை என்ற நிலையே அனைத்து அரசு கால்நடை  மருத்துவமனைகளிலும்  காணப்படுகிறது.  

தங்களது வாழ்வாதாரத்திற்காக ஆடு,  மாடு வளர்ப்பில்  ஈடுபடும் விவசாயிகள்,  மருந்துகள் வாங்க முடியாமலும், அவற்றை  காப்பாற்ற முடியாமலும், கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். இவைகளுக்கு  ஏற்படும் உடல் நல  குறைவுகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு கால்நடை  மருத்துவமனையையே நம்பியே  உள்ளனர்.  ஆனால் குமரி மாவட்ட கால்நடை  மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு பொது மக்களை  அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இந்த தட்டுப்பாட்டை தங்களுக்கு சாதகமாக்கி  கொண்டு தனியார்  மருந்தகங்கள் வசூல் வேட்டையில் ஈடுபட தொடங்கி உள்ளன.  இதனால் பணம் செலவழிக்க முடியாதவர்கள் தங்களது  நாய்,  ஆடு, மாடுகளுக்கான  தடுப்பூசிகளை போடாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். எனவே  அரசு  கால்நடை மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை போக்க   போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடை மருந்தகங்களில்  தேவையான மருந்துகள் இருப்பு இருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி   செய்ய வேண்டும். இருப்பு இல்லாத கால்நடை மருத்துவமனைகளுக்கு மருந்துகளை   உடனே ஒதுக்கீடு செய்ய வேண்டும்.குறிப்பாக வெறிநாய் கடிக்கான ஆன்டி   ரேபிஸ் மருந்து, ஆடு, மாடுகளுக்கு ஏற்படுகின்ற நோய்களுக்கான தடுப்பூசி   மருந்துகள் மற்றும் அனைத்து வகை நோய்களுக்கான மருந்துகளையும் குமரி   மாவட்டத்தில் உள்ள கால்நடை அரசு மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்ய   வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பு.

ஆன்டி ரேபிஸ் மருந்து ₹600
குமரியில்   உள்ள அரசு  கால்நடை மருத்துவமனைகளில் வெறி நாய் கடிக்கான தடுப்பூசி   மருந்துகள் இருப்பு  இல்லை என்பது நாய் வளர்ப்பாளர்களின் குற்றச்சாட்டு.   இந்த மருந்தை வெளியில்  வாங்க சுமார் ₹600 செலவு செய்ய வேண்டுமாம். வசதி   படைத்தவர்கள் மருந்து  வாங்கி வந்து அரசு கால் நடை மருத்துவமனைகளில்   போட்டு செல்கின்றனர்.  வசதியில்லாதவர்கள் மருந்து இருப்பு இல்லை என்றதும்   திரும்பி சென்று விடுகின்றனராம்.

வேகமாக பரவும் பார்கோ 4
குமரியில் தெரு நாய்கள் மட்டுமின்றி வீடுகளில் வளர்க்கும் நாய்களையும் பார்கோ 4 என்ற புதிய  வைரஸ் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் பாதித்தால், முதலில் 3 நாட்களில்  நாய்கள் உணவு எடுப்பதை குறைக்கும். வாந்தி, வயிற்று போக்கு இருக்கும்.  பின்னர் உணவு எடுக்காமல் சில நாட்களில் இறந்து விடும். இந்த நோய்க்கும் கால்நடை மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை.

Tags : government ,hospitals ,district ,Kumari ,hunt ,pharmacies , Drug shortage, government veterinary ,Kumari district,pharmacies, collections
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...