×

நாகர்கோவிலில் முன்னேற்பாடுகள் இல்லை மழைக்கு ஒதுங்கி நிற்க கூட முடியாமல் தவிக்கும் பயணிகள்: ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்கள் இயங்குமா?

நாகர்கோவில்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமலில் இருந்த ஊரடங்கில் தற்போது தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கடந்த 2ம்தேதியில் இருந்து குமரி மாவட்டத்திலும் அரசு பஸ்கள் இயங்கி வருகின்றன. மண்டலங்களுக்குள் இயங்கலாம் என்ற உத்தரவின் படி, தற்போது நாகர்கோவிலில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் திருநெல்வேலிக்கான பஸ்களில் தான் கூட்டம் அதிகமாக உள்ளது. வடசேரி பஸ் நிலையத்தில் காய்கறி சந்தை உள்ளதால், பஸ் நிலையத்துக்கு வெளியே இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த இடம் போதுமானதாக இல்லை. பஸ்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும் கூட, பயணிகள் அதிகமாக வரும் சமயங்களில் பெரும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள சாலை ஓரத்தில் பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள் பார்க்கிங் உள்ளது. இதனால் பஸ்கள் வந்து செல்வதில் சிரமம் உள்ளது. இந்த பகுதியில் மழைக்கு ஒதுங்கி நிற்க கூட இடமில்லாமல் பயணிகள் தவிக்கிறார்கள். எந்த பஸ் எப்படி வரும் என்பதும் தெரியாது. முறையான அறிவிப்பு எதுவும் இல்லை.

இந்த நிலையில் திருநெல்வேலி பஸ்களை மட்டும், வடசேரி பஸ் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் இருந்து இயக்கும் வகையில் காய்கறி கடைகளை இடமாற்றம் செய்து தருமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மாநகராட்சி தரப்பில் இன்னும் அனுமதி கொடுக்கப்பட வில்லை. 2 நாட்களாக ஆணையர் சரவணக்குமார் பஸ் நிலையத்தில் ஆய்வு செய்துள்ளார். ஆனால் இந்த பிரச்சினையில் முடிவு எட்டப்பட வில்லை. இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பச்சிளம் குழந்தையுடன் வரும் இளம்பெண்கள், குழந்தைக்கு பசிக்கு எடுக்கும் நேரத்தில் செய்வதறியாமல் தவிக்கிறார்கள். தரையில் அமர்ந்து பால் கொடுக்க கூட இடமில்லை. நடைபாதைகளில் சிறுநீர் கழிப்பு, துர்நாற்றம் என பெரும் இடையூறாக உள்ளது. எனவே  முதல் பிளாட்பார பகுதியை பஸ்களுக்காக ஒதுக்க வேண்டும். இல்லையென்றால் வடசேரி ஆம்னி பஸ் நிலையத்தில் உள்ள தனியார் ஆம்னி பஸ்களை, இந்து கல்லூரி அருகே உள்ள மாநகராட்சி மைதானத்துக்கு இடமாற்றி விட்டு ஆம்னி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பஸ் நிலையத்தில் உள்ள ஏற்பாடுகளை கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பயணிகள் கூறி உள்ளனர்.

Tags : passengers ,Nagercoil ,bus station ,Omni ,Cannes , Travelers, stand , Can buses operate,Omni bus station?
× RELATED அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே...