×

சீசனுக்கு தயாராகும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்: ரூ.4.90 கோடியில் சீரமைப்பு பணிகள் தீவிரம்

ஈரோடு: ஈரோடு அருகே வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் நடப்பாண்டு செப்டம்பர் மாதம் சீசன் தொடங்க உள்ள நிலையில் ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. மேலும், ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக வெள்ளோடு பறவைகள் சரணாலயம் விளங்கி வருகிறது. இந்த சரணாலயம் 215 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆண்டுதோறும் சீசன் காலமான செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்கிறது. குறிப்பாக, இந்த சரணாலயத்திற்கு பெலிகான், கொசு உல்லான், வண்ணான்நாரை, கூழைகெடா, பெரியநீர் காகம், பாம்புதாரா, சாம்பல்நாரை, வெண்மார்பு, மீன்கொத்தி, ஜெம்புகெரி உள்ளிட்ட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன. இதை காண சீசன் காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் அதிகளவில் வருகின்றனர். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக கடும் வறட்சி காரணமாக சரணாலயம் வறண்டு போனது. இதனால், பறவைகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.

இந்நிலையில், சுற்றுச்சூழல்துறை சார்பில் ஏரியை தூர்வாரி பலப்படுத்தவும், அடிப்படை வசதிகள் செய்யவும் ரூ.4.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கடந்தாண்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த பணிகளை மார்ச் மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டனர். ஆனால், கொரோனா ஊரடங்கால் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏரியை சுற்றிலும் நடைபாதை, இருக்கைகள், மின்விளக்குகள், காம்பவுண்ட் சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்து சீசன் காலமான செப்டம்பர் மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, இந்த ஏரி தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சியளித்து வருகிறது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் விஸ்மிஜூ விஸ்வநாதன் கூறியதாவது:

வெள்ளோடு பறவைகள் சரணாலயம் கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீரால் நிரம்பி காட்சியளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக வறண்டு போயிருந்தது. தற்போது, தண்ணீர் நிரம்பியுள்ளதால் இந்தாண்டு பறவைகள் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. செப்டம்பர் மாதம் சீசன் தொடங்குவதற்கு முன்பாக சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையிலும், தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. மழைநீர் குளத்திற்கு வருவதற்காக 11 இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தேவையான இடங்களில் சோலார் மின் விளக்குகள், சுற்றுலா பயணிகளுக்கு ஓய்வறை, சிறிய அளவிலான பூங்கா உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரிக்கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அனைத்து பணிகளையும் உள்ளூர் தொழிலாளர்களை கொண்டு செய்து வருகிறோம். இன்னும் ஓரிரு மாதத்தில் முடிக்கப்பட்டு சீசனுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவித்தார்.



Tags : White Bird Sanctuary ,season , White Bird Sanctuary, preparation,season, Rs
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு