×

தர்மபுரியில் அரேபிய பேரீட்சை விளைச்சல் அமோகம்: அறுவடை பணி தொடங்கியது

தர்மபுரி: தர்மபுரி அருகே 11 ஏக்கரில் சாகுபடி செய்த அரேபிய பேரீட்சை விளைச்சலுக்கு வந்ததால் நேற்று அறுவடை செய்யும் பணி தொடங்கியது. வெப்ப மண்டலமான தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாமல், விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். விவசாயத்தை விட்டு மாற்றுத்தொழிலுக்கு விவசாயிகள் சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தர்மபுரி அருகே கிருஷ்ணாபுரத்தில் அரேபிய பேரீட்சை சாகுபடி செய்து அமோக விளைச்சலை கண்டுள்ளது. தற்போது பேரீட்சை மரங்களில், பழங்கள் குலை, குலையாக பழுத்து தொங்குகின்றன. இதன் அறுவடை நேற்று தொடங்கியது. உள்ளூர் சிறு வியாபாரிகள், சில்லரை விற்பனைக்கு அவற்றை வாங்கி செல்கின்றனர். பாலைவனங்களில் மட்டுமே விளையும், பணம் கொழிக்கும் பயிரான பேரீட்சை, தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது குறித்து விவசாயி நிஜாமுதீன் கூறியதாவது:கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு அரேபிய நாட்டில் இருந்து, 250 பேரீட்சை கன்றுகள் வாங்கி வந்து நட்டேன். தர்மபுரியின் தட்பவெட்ப நிலை பேரீட்சை கன்று வளர்ப்பதற்கு ஏற்றதாக அமைந்தது. பின்னர் இதனை, 11 ஏக்கரில் பேரீட்சை பண்ணையாக மாற்றினேன். கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து விவசாயிகள், வேளாண்மையியல் மாணவர்கள் வந்து பார்த்து வளர்ப்பு, பராமரிப்பு குறித்து கேட்டு தெரிந்து செல்கின்றனர். மேலும் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலத்தில் இருந்தும் பேரீட்சை கன்றுகள் வாங்கி செல்கின்றனர். தற்போது வெளிநாட்டிற்கு நாற்றுகள் ஏற்றுமதியாகிறது. முன்பதிவு செய்து நாற்றுகள் வாங்கி செல்கின்றனர். 35 வகையான பேரீட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை தொடங்கி உள்ளது. ஜூலை மாதம் வரை இந்த சீசன் இருக்கும். ஒரு கிலோ பேரீட்சை ₹150 முதல் ₹300 வரை தோட்டத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Dharmapuri ,Arabian , Arabian exam, yield ,Dharmapuri, Harvest work started
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு