×

கம்பம் பகுதியில் மாட்டுத்தீவனத்திற்கு விற்கப்படும் அரசு சத்து மாவு: அங்கன்வாடி ஊழியர்கள் மீது புகார்

கம்பம்: தமிழகத்தில் அங்கன்வாடியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் ஊட்டச்சத்திற்காக சமூக நலத்துறை மூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டத்தின் கீழ், சத்து மாவு வழங்கப்படுகிறது. இதன்படி, உத்தமபாளையம் வட்டாரத்தில் 107 அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 2 வயதிற்கு மேற்பட்ட 5 வயதுக்குட்பட்ட 1,590 குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு இருமுறை 165 கிராம் எடை கொண்ட ஊட்டச்சத்துமாவு இலவசமாக வழங்கப்படுகிறது. இந்நிலையில், அங்கன்வாடி ஊழியர்கள் சிலர் புரோக்கர்கள் மூலம் மாட்டுத்தீவனத்திற்காக ஊட்டச்சத்து மாவை ஒரு கிலோ ரூ.30க்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அங்கன்வாடி குழந்தைகளின் உடல் நலன் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சில சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கால்நடை தீவனப்பொருட்களின் விலையைக் காட்டிலும் குறைந்த விலையில் சத்துமாவு பாக்கெட்கள் கிடைக்கின்றன. கால்நடை வளர்ப்பவர்கள் புரோக்கர்கள் மூலம அங்கன்வாடி மையங்களிலிருந்து சத்துமாவை குறைந்த விலைக்கு வாங்குகின்றனர். புரதச் சத்து மிகுந்த இந்த மாவை, மாடு தண்ணீர் குடிக்கும்போது சிறிது கலந்து கொடுத்தால், பால் அதிகமாக கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால், கால்நடை வளர்ப்பவர்கள் போட்டிபோட்டிக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அதிகாரிகளுக்கு கவனிப்பு
உத்தமபாளையம் வட்டாரத்தில் கம்பம், ஆங்கூர்பாளையம், முத்துலாபுரம், கோம்பை, தேவாரம் மற்றும் காமயகவுண்டன்பட்டி பகுதிகளில் அரசு சத்துமாவு விற்பனை படு ஜோராக நடக்கிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்க, அங்கன்வாடி ஊழியர்கள் அவர்களை மாதந்தோறும் கவனிப்பதாக கூறப்படுகிறது.

Tags : Government ,Nutrition Flour to Cow Livestock ,Anganwadi Workers , Government Nutrition ,Flour , Cow Livestock, Kampam: Complaints , Anganwadi Workers
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...