×

கர்ப்பிணி யானை வெடிவைத்து கொல்லப்பட்டது திட்டமிட்ட செயல் : சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!

டெல்லி : கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அவாத் பிஹாரி கெளஷிக் என்பவா் உச்சநீதின்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அந்த மனுவில், கர்ப்பிணி யானை வெடிவைத்து கொல்லப்பட்டது திட்டமிட்ட செயல் என்றும் இதை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமும் இதை போல, கொல்லம் மாவட்டத்தில் யானை ஒன்று கொல்லப்பட்டுள்ளதால் இது போல வேறு ஏதேனும் கொடுமை நடந்து இருந்தால், அவற்றின் முழு விவரத்தையும் கோர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கர்ப்பிணி யானை கொல்லப்பட்டது தொடர்பாக சிபிஐ அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். விசாரணை பெரிய அளவில் இருக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் அவாத் பிஹாரி கெளஷிக் புகாரில் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வெள்ளியாறு நதியில் பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கடந்த மே 27-ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. வெடிமருந்து நிரப்பப்பட்ட தேங்காயை உண்ண முயன்றபோது, அது வெடித்து அந்த யானை காயமடைந்து உயிரிழந்தது வன அதிகாரி ஒருவரின் முகநூல் பதிவு மூலம் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் அது உறுதி செய்யப்பட்டது. கா்ப்பிணியான அந்த யானை, வாய் பகுதியில் காயமடைந்ததால் இரண்டு வாரங்களாக உணவு, குடிநீரை உட்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இந்தச் சம்பவம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : Death ,CBI ,Supreme Court , Pregnant, Elephant, Explosive, Action, CBI, Investigation, Supreme Court, Case
× RELATED மேற்குவங்க அரசின் மேல்முறையீட்டு...