×

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து கோவையில் தொடர் போராட்டம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

சென்னை: “உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து  கோவையில் தொடர் போராட்டம் நடத்தப்படும்” என்று மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலமாக ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பகுதி-ஒன்றிய-நகர திமுக செயலாளர்கள், கோவை மண்டல சட்டப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்களான கே.எம்.தண்டபாணி, பி.ஆர்.அருள்மொழி உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சட்டத்துறைச் செயலாளர் கிரிராஜன், சட்டத்துறைத் தலைவர் சண்முகசுந்தரம், மூத்த வழக்கறிஞர்கள் வில்சன் எம்.பி., என்.ஆர்.இளங்கோ எம்.பி., பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் ந.பழனிசாமி, உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் மு.கண்ணப்பன், கோவை மாநகர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் முத்துசாமி, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் கோவை மாநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்துகொண்ட கூட்டம் ேநற்று நடந்தது.இதில், தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் மிகக் கோரமாகப் பரவிவரும் இந்தச் சூழலிலும், கோவை மாவட்ட நிர்வாகிகளின் அவசரக் கூட்டம் நடைபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கு காரணம்; கொரோனா பரவிடும் வேகத்தையும் விஞ்சிடும்  அளவுக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி  செய்து வரும் ஊழலும், அராஜகமும் தான்.

உள்ளாட்சித் துறை அமைச்சராக மட்டுமல்லாமல்; எப்படி சேலம் மாவட்டத்திற்கு மட்டுமான முதலமைச்சராக எடப்பாடி தன்னை உருமாற்றிக்கொண்டு வருகிறாரோ, அவருக்கு இணையாகவும் போட்டியாகவும், தன்னை ‘கோவையின் கோமானாக’ - ‘சூப்பர் முதலமைச்சராகவே’  நினைத்து; ஜனநாயகத்திற்கு விரோதமாகவும், மக்களுக்கு எதிராகவும்,  தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் வேலுமணி. எப்போதும்  கொள்ளை, எதிலும் லஞ்சம், முடிவே இல்லாத முறைகேடுகள் ஆகியவற்றோடு; தன்னை அரசியல்ரீதியாக விமர்சிப்பவர்களைப் பழிவாங்குவதிலும், அராஜகம் - அதிகார துஷ்பிரயோகம் - ஆணவ மிரட்டல்கள் ஆகியவற்றில் இறங்குவதிலும்,  சற்றும் தயங்காதவராகச் சல்லடம் கட்டி ஆட்டம் போட்டு வருகிறார்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி மக்களைப் பாதுகாப்பதை விட,  தன்னை அரசியல் ரீதியாக எதிர்ப்பவர்களை வஞ்சம் தீர்த்துக் கொள்வதில்தான் அமைச்சரின் ஆர்வமும் தீவிரமான கவனமும் முழுமையாக உள்ளன. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இருந்த கண்துடைப்பு நாடகங்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களை கைது செய்தார். அவரது அராஜகங்களையும்,  ஊழல்களையும் அம்பலப்படுத்திய திமுக செயல்வீரர்களை, தொடர்ச்சியாகக் கைது செய்து,  கோவையில் தனியாக ஒரு ‘ஹிட்லர் தர்பாரை’ நடத்தி வருகிறார்.

இதற்கு எதிராக கடந்த 5ம் தேதி கோவை மாவட்டத்தில் திமுக செயல்வீரர்கள் முன்னின்று நடத்திய, ஜனநாயக வழியிலான கண்டன ஆர்ப்பாட்டம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.கொரோனா காலத்தில், அதற்கான விதிமுறைகளையும் தனிமனித இடைவெளியையும் பின்பற்றி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்யவும் வேலுமணியின் போலீஸ் தயங்கவில்லை.கடந்த 1ம் தேதி ஆளும்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. அதற்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்; எங்காவது கைது செய்தார்களா என்றால் இல்லை. அது மட்டுமல்ல; மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்  என அதிமுக தலைமையே அறிவுறுத்தி இருந்தது. ஆனால் கோவை திமுகவினரை மட்டும் கைது செய்கிறார்கள் என்றால்; சட்டம் என்பது கட்சிக்கு தகுந்த மாதிரி - வேலுமணியின் விபரீதமான எண்ணத்திற்கு ஏற்ற மாதிரி -  வளைக்கப்படுகிறது என்பது தானே பொருள்!அதுவும் வேலுமணியின் சொந்த மாவட்டத்தில், அவரே அனைவர்க்கும் - அனைத்திற்கும், சட்டாம்பிள்ளையாக மாறி, அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கேற்றபடி, மக்களாட்சி மாண்புகளைக் காவு கொடுத்து, கோவை மாவட்டத்தை ஒரு தீவு போல நினைத்து, தனியாட்சி நடத்தி வருவதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

கொரோனா நோய்த் தொற்று நேரத்தில், இத்தகைய போராட்டங்களை தவிர்க்கலாம், தள்ளி வைக்கலாம் என்று நினைத்தாலும்; கொரோனா நேரத்திலும் - அதுகுறித்து கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல்; இத்தகைய அநியாயங்களை - கொடுமைகளை - அட்டூழியங்களை ஆளும்கட்சியின் அமைச்சரே நடத்தும் போது, மக்களுக்காக - மக்களைப் பாதுகாப்பதற்காக - மக்களின் சார்பில் அதைத் தட்டிக் கேட்காமல் விட்டு விட்டால், அதுவே விஷ விருட்சமாக மேலும் வளர்ந்துவிடும் என்பதால், அந்தத் தீமையை எதிர்த்து நாமும் போராடியே தீர வேண்டிய கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்படுகிறோம்.எனவே, சர்வாதிகாரத்துடனும், தான்தோன்றித்தனமாகவும், அராஜகமாகவும், ஆணவப் போக்குடனும், ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்து வரும் அமைச்சர் வேலுமணியை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜனநாயகக் கடமையுடனும் நெறிமுறைப்படியும் மக்கள் கடமையாற்றும் திமுகவினர் மீது காவல்துறையை ஏவி பொய் வழக்குப் போடும் அராஜக நடவடிக்கையை அமைச்சர் வேலுமணி உடனடியாக நிறுத்தாவிட்டால் அதற்கான தொடர் போராட்டங்களை அவர் சந்திக்க நேரிடும் என்று இக்கூட்டம் எச்சரிக்கிறது.

Tags : SB Velumani ,Minister SB ,Kovil ,Velumani Kovil , Continuous agitation, Kovil, condemning Minister, SB Velumani
× RELATED வெறும் 3% ஓட்டுதான்பாஜ பத்தி பேசி...