×

கலைந்துபோகிறது கவர்ச்சி பிம்பம் ஊரடங்கில் ஆட்டம் கண்ட திரையுலகம்

* 20 லட்சம் கோடியில் எதுவுமே ஒதுக்காத சோகம்

கோடிகளில் புரளும் சினிமா துறை, வெளி உலகத்தை பொருத்தவரை உல்லாசமான கவர்ச்சி உலகம். ஆனால் நிஜத்தில் மற்ற துறைகளை போலவே அன்றாடம் அல்லல்படும் தொழிலாளர்களும் தினக்கூலிக்கு உழைக்கும் துணை நடிகர்கள், நலிந்த கலைஞர்கள் என தத்தளிக்கும் நிலையிலேயே இருக்கிறது. கொரோனா ஊரடங்கு மற்ற துறைகளை ஆட்டம் காண செய்தது போல், சினிமா துறையை திக்குமுக்காட வைத்திருக்கிறது என்றே சொல்லலாம். பிற துறை நிறுவனங்களை திறக்க அரசு அனுமதி அளித்துவிட்டது. ஆனால் சினிமா துறையின் நாடியாக கருதப்படும் தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. தியேட்டர்கள் இல்லாமல் இந்த துறையே இல்லை என்பதால் திரையுலகை சேர்ந்த மொத்த கலைஞர்களும் சோர்ந்துபோயுள்ளனர். கடந்த மார்ச் 15ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து மார்ச் 19ம் தேதி முதல் படப்பிடிப்புகள், சினிமா தொடர்பான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. 3 மாதங்கள் கடந்த நிலையில் சினிமா தொடர்பான எடிட்டிங், டப்பிங், இசை சேர்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு மட்டும் சில தினங்களுக்கு முன் அனுமதி அளிக்கப்பட்டது. சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் சினிமா படப்பிடிப்புக்கு இன்னும் அனுமதி தரவில்லை.

இது பற்றி தயாரிப்பாளர் டி.சிவா, தினகரனுக்கு அளித்த பேட்டி:கடந்த 3 மாதமாக தமிழ் சினிமாவின் நிலை பரிதாபமாக உள்ளது. படப்பிடிப்புகள் நடக்காததால் சினிமா தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். படப்பிடிப்பு நடத்தினால் அவர்களின் நிலை மாறும். ஆனால் பாதுகாப்புக்குரிய சூழல் இல்லாமல் படப்பிடிப்புகள் நடத்துவது அபாயகரமானது. அதனால் படப்பிடிப்புக்கு அனுமதி கோரினாலும் எப்படி அதை நடத்துவது என்பதில் சிக்கல் உள்ளது. கேமராவுக்கு பின்னால் இருப்பவர்கள் மாஸ்க் அணியலாம், சமூக இடைவெளி கடைபிடிக்கலாம். ஆனால் கேமரா முன்னால் நடிப்பவர்களால் அதை செய்ய முடியாது. ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு ஓரிடத்தில் 100 பேர் கூடுவார்கள். யாருக்காவது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட, உடனே படப்பிடிப்பை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும். ஒரு படப்பிடிப்பில் நடக்கும் இதுபோன்ற சம்பவத்தால் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்படும். இதனால் படப்பிடிப்புகளை பாதுகாப்புடன் மீண்டும் நடத்துவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.

படப்பிடிப்புக்கு பிறகான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அது கூட தீவிரமாக நடக்கவில்லை. சிறு படங்களுக்கான பணிகள் நடக்கிறது. சில படங்களுக்கு டப்பிங் பேச கூட கலைஞர்கள் வர மறுக்கிறார்கள். அவர்கள் மீது தவறில்லை. பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனால் கொரோனாவுக்கு பயந்து அவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்கள் வந்தே ஆக வேண்டும் என நாங்கள் நிர்பந்திக்க முடியாது.
கடந்த 3 மாதங்களில் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதாலும் புதிய படங்களின் ரிலீஸ் நிறுத்தப்பட்டதாலும் பெரிய தயாரிப்பாளர்களுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டுள்ளது. சிறு பட தயாரிப்பாளர்களுக்கு பல லட்சங்களில் இழப்பு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் ஒரு அலுவலகத்தை நடத்துவதற்கு கூட அங்கு பணிபுரிபவர்களுக்கு சம்பளம், மின் கட்டணம், அலுவலக வாடகை, பராமரிப்பு செலவுகள் என மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது. இவ்வாறு சிவா கூறினார்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி  கூறியதாவது: பெப்சிக்கு உட்பட்ட 24 தொழிற்சங்கத்ைத சேர்ந்த சுமார் 25  ஆயிரம் தொழிலாளர்களுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் மளிகை பொருட்கள், பண உதவி செய்ததில் எப்படியோ 3 மாதங்கள் வரை சமாளித்து கொண்டு  வந்துவிட்டோம். அடுத்தடுத்த நாட்களை எப்படி சமாளிப்பது என்று ெதரியவில்லை.  அரசை தவிர வேறு யாரிடமும் நாங்கள் போய் நிற்கவும் முடியாது.
மத்திய  அரசு அறிவித்த 20 லட்சம் கோடி திட்டத்தில் சினிமாத்துறைக்கு எந்த ஒரு  அறிவிப்பும் இல்லை. மற்ற துறை தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்த  அரசு திரைப்படத் தொழிலாளர்களுக்கும் மாதம் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை  நிவாரணத் தொகை அறிவித்திருக்கலாம். நிறைய தயாரிப்பாளர்கள் கடன்  வாங்கித்தான் படம் தயாரிக்கிறார்கள். அவர்களின் கடனுக்கு வட்டியை தள்ளுபடி  செய்திருக்கலாம், அல்லது குறைத்திருக்கலாம். இது எதுவுமே அறிவிப்பில்  இல்லை. இத்தனைக்கும் சினிமாத்துறை தொழில் துறையாக  அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

தியேட்டர்கள் 3 மாதமாக மூடப்பட்டு  கிடக்கிறது. இனி மக்கள் தியேட்டருக்கு வருகிற வரை தியேட்டர்களுக்கு  மின்கட்டண சலுகை அளிக்க வேண்டும், வரியை நீக்க வேண்டும், அல்லது வரியை  குறைக்கவாவது செய்ய வேண்டும். நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு துறை  முடங்கினால் மீண்டும் அதை இயக்குவது எளிது. ஆனால் சினிமா ஏற்கெனவே  தடுமாற்றத்தில் இருந்த துறை, அது மீள வேண்டுமானால் அரசு தனி கவனம் செலுத்த  வேண்டும்.
பெப்சிக்கு உட்பட்ட 24 தொழிற் சங்கங்களில் 11 சங்கங்கள்  தினக்கூலி பணியாளர்களை கொண்டது. அவர்கள் தவிர துணை இயக்குனர்கள், துணை  ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரும் தினக்கூலி பணியாளர்கள்தான். ஒப்பந்த பணியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 250 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொழிற்சங்க  அமைப்புக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்றார்.

ஜூலையில் தியேட்டர் திறப்பு?
தமிழ்நாடு தியேட்டர்கள் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறும்போது, ‘நாடு முழுவதும் தியேட்டர்கள் திறந்தால்தான் படங்களை ரிலீஸ் செய்ய முடியும். காரணம் இந்தி படமோ தமிழ் படமோ நாடு முழுவதுமே திரைக்கு வருகிறது. மத்திய அரசும் இது குறித்து ஆலோசித்து  வருகிறது. ஜூலை முதல் வாரத்தில் தியேட்டர்கள் திறக்கப்படும் என  நம்புகிறோம்’ என்றார்.

பாலிவுட், டோலிவுட் கலக்கம்
தெலுங்கு சினிமாவான  டோலிவுட்டில் படப்பிடிப்புகள், புதிய படங்கள் ரிலீஸ், போஸ்ட் புரொடக்‌ஷன்  பணிகள் நிறுத்தம் மற்றும் தியேட்டர்கள் மூடலால் ரூ.2 ஆயிரத்து 500 கோடி  முடங்கியுள்ளது. இதேபோல் இந்தி சினிமாவான பாலிவுட்டில் ரூ.5 ஆயிரம் கோடி  முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில்  தலா ரூ.700 கோடி முதல் 900 கோடி வரை முடங்கியுள்ளது.

நடிகர்கள் சம்பளம் குறையுமா?
தியேட்டர்கள்  திறக்கப்பட்டாலும் 50 சதவீத ரசிகர்களே அனுமதிக்கப்படுவார்கள் என  கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூல் பாதியாக குறையும். எனவே நடிகர்களின்  சம்பளத்தை 50 சதவீதம் வரை குறைக்க இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்  சம்மேளனம் ஆலோசனை நடத்தி வருகிறது. லாபத்தில் பங்கு என்ற அடிப்படையில்  ஹீரோக்கள் சம்பளம் பெற வேண்டும் என்ற கருத்தும் தமிழ் திரையுலகம் உள்பட பல  மொழி திரையுலகில் பரவ ஆரம்பித்துள்ளது.

பட செலவுகளை குறைக்க திட்டம்
நடிகர்,  நடிகைகள், இயக்குனர்களுக்கு கேரவன் வழங்குவது, உயர்வகுப்பு விமான கட்டணம்,  நட்சத்திர ஓட்டலில் தங்கும் வசதி உள்ளிட்ட செலவுகளை கைவிட தயாரிப்பாளர்கள்  தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. படத்துக்கான பட்ஜெட்டை குறைக்கவும்  குறைந்த தொழிலாளர்களை வைத்து படங்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அல்லல்படும் துணை நடிகர்கள், டெக்னீஷியன்கள்
துணை  நடிகர்கள் பலரும் தினசரி சம்பளம் பெறுகிறவர்கள். ஒரு நாளைக்கு ரூ.400  முதல் ரூ.500 வரை சம்பளம் கிடைக்கும். படப்பிடிப்பில் இருக்கும்போது 3 வேளை  உணவு இலவசம். இப்போது எந்த வருமானமும் இல்லாமல் அவர்கள் தினசரி  சாப்பாடுக்கும் அல்லல்பட்டு வருகின்றனர். தினசரி சம்பளம் பெறும்  டெக்னீஷியன்களின் நிலையும் இதுபோலத்தான் உள்ளது.



Tags : Sexy , Dissolving sexy, image ,curtains
× RELATED குடிப்பதை நிறுத்தி விட்டேன்; கவர்ச்சி நடிகை தடாலடி