×

அதிக கட்டணம் வசூலித்தால் கண்டிப்பாக கடும் நடவடிக்கை: கே.ஏ.செங்கோட்டையன், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

தமிழகம் முழுவதும் உள்ள 3,742 தனியார் பள்ளிகளில் சுமார் 5 லட்சம் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். தனியார் பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளாகவே கல்வி கட்டணம் மற்றும் நன்கொடை என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் வரை மாணவர்களிடம் வசூல் செய்கின்றன என்ற புகார்கள் வருகின்றன. இதை தடுக்க, தமிழக பள்ளி கல்வித்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. விடுபட்டுபோன பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 15ம் தேதி முதல் நடைபெற உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், சில பாடங்களுக்கான தேர்வும் விடுபட்டு போயுள்ளது. அதுவும், இம்மாதம் நடைபெற உள்ளது. மேற்கண்ட தேர்வுகள் முடிவடையாத காரணத்தாலும், கொரோனா தொற்று கட்டுக்குள் வராத காரணத்தாலும், பள்ளிகளை மீண்டும் திறக்க முடியாத நிலை உள்ளது. வரும் கல்வி ஆண்டுக்கான வகுப்பு துவங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், பல தனியார் பள்ளிகள், கல்விக்கட்டணம் செலுத்தக்கோரி பெற்றோருக்கு டெலிபோன் மூலமாகவும் குறுஞ்செய்தி மூலமாகவும் தகவல் அளித்து வருவதாக புகார் வந்துள்ளது. பாடப்புத்தகம், நோட்டு, சீருடை, பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ், காக்கிஅட்டை என நடப்பு கல்வியாண்டிற்குரிய அனைத்து உபகரணங்களுக்கும் அட்வான்ஸ் கொடுத்தாகிவிட்டது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும். கரண்ட் பில், தண்ணீர் பில் கட்ட வேண்டும். புதிய பெஞ்ச், டெஸ்க் வாங்கவேண்டும், புதிய வகுப்பறைகள் கட்டுமான பணி பாதியில் நிற்கிறது. ஆய்வக பொருட்கள் வாங்கவேண்டும். ஸ்மார்ட் கிளாசுக்கு லேப்டாப், டேப்லெட் வாங்கவேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகங்கள் தங்களது செலவீனங்களை அடுக்கிக்கொண்டே போவதாகவும், இதன்மூலம் பெற்றோருக்கு மனரீதியாக அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல் வந்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று மற்றும்  ஊரடங்கு காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மாணவர்கள்  தங்களது கல்வி கட்டணத்தை உடனடியாக செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.  ஆனாலும், பல தனியார் பள்ளிகள் இப்படி வற்புறுத்துவது ஏற்புடையது அல்ல. இது,  தமிழக அரசின் உத்தரவை மீறிய செயல் ஆகும். ஒரு சில தனியார் கல்வி நிறுவனங்கள்,  தனியார் வங்கி மூலம் இணைந்து கல்வி கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுத்து  வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இது குறித்து புகார் ஏதாவது வந்தால் அந்த  கல்வி நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற புகார்கள் இனி வரக்கூடாது  என்பதற்காக, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி  அலுவலர் மூலமாக அனைத்து தனியார் பள்ளி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை  அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை உடனடியாக  வசூலிக்கக்கூடாது. ஆன்லைன் மூலமாக கட்டணத்தை செலுத்தக்கோரியும் பெற்றோரை  வற்புறுத்தக்கூடாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை தொடர்ந்து, அனைத்து தனியார் பள்ளிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.  அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதேபோன்று தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்பு,  நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து புகார் வந்தாலும்  உரிய நடவடிக்கை  எடுக்கப்படும். அரசு உத்தரவை மீறி, கல்வி கட்டணத்தை  செலுத்தக்கோரி யாரேனும் வற்புறுத்தினால், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதில், தயவு, தாட்சண்யம் கிடையாது.  தமிழக அரசு போலவே, அந்தந்த கல்வி நிறுவனங்களும், மாணவர்கள் மற்றும்  பெற்றோர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.


Tags : KA Sengottaiyan , Strict action, charged higher, KA Sengottaiyan
× RELATED பண்ணாரி அம்மன் கோயிலுக்கு மாற்று இடம்...