ஆசிரியர்கள் வாழ்வாதாரமும் கவனிக்கத்தானே வேண்டும்: பா.புருஷோத்தமன்,சென்னை எவர்வின் பள்ளிக்குழும தாளாளர் மற்றும் மூத்த முதல்வர்

தனியார் பள்ளிகள் சுயநிதி பள்ளிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. காரணம் அரசாங்கத்தின் எந்த நிதி உதவியும் இல்லாமல் பெற்றோரிடமிருந்து பெறப்படும் நிதியை வைத்து மட்டுமே பள்ளியின் எல்லா செலவுகளையும் செய்ய வேண்டி இருக்கிறது. அதே சமயம் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படுவதால், அரசின் விதிமுறைகளுக்கு மாறாகவோ அல்லது மக்கள் நலனுக்கு எதிராகவோ எந்த தனியார் பள்ளியும் இயங்க முடியாது, இயங்கவும் கூடாது.  ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் எதிர்காலம் பற்றி நினைத்து பீதியுடன் நோக்குகின்றனர். எந்த துறையையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் கல்வி துறையையும் ஒரு கை பார்த்துவிட்டது. குழந்தைகளை வீட்டில் முடக்கி அவர்களின் பெற்றோர்களை வேலை இழக்கச் செய்து, அவர்கள் படிக்கும் பள்ளிகளையும் இரண்டரை மாதங்களாக மூடியிருக்கிறது கொரோனா. குறிப்பாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் சுமார் 5 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களும் சம்பளம் வருமா? வராதா? என்ற ஏக்கத்தில் நிம்மதி இழந்து காணப்படுகின்றனர்.

 இந்நிலையில் தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் வசூலிப்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. கல்விக்கட்டணம் வசூலிக்கக்கூடாது. ஆனால் ஆசிரியர்களுக்கும் சம்பளத்தை நிறுத்தக் கூடாது என்று அரசு கூறுகிறது. பெற்றோரும் பாதிக்கப்படக்கூடாது, ஆசிரியர்களும் பாதிக்கப்படக்கூடாது என்ற அரசின் நோக்கம் எங்களுக்கு புரிகிறது.  ஆனால் கட்டணம் பெறாமல் சம்பளம் எப்படி தருவது என்ற கேள்விக்கு பதிலும் தேவைப்படுகிறது. ஓரிரு மாதங்கள் என்றால் கூட சமாளித்து விடலாம். தொடர்ச்சியாக இப்படி ஒரு நிபந்தனையை நடைமுறைப்படுத்த இயலாது. முதலில் தனியார் பள்ளிகளின் பெற்றோர்களின் பொருளாதார நிலையை நாம் வேறு கோணத்தில் அணுகுவதும் அவசியம்.

 எல்லா பெற்றோர்களும் ஏழைகள் இல்லை. வசதி படைத்த பெற்றோர்களில்  எல்லோரும் வேலை இழந்து தவிக்கவில்லை. கணிசமான பெற்றோர் ஐ.டி கம்பெனிகளிலும், அரசு பணியிலும், வணிகத்துறையிலும் ஈடுபட்டு தொடர்ந்து வருமானம் பெறுகின்றனர். ஆனால் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு பெற்றோர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

 எனவே, கல்விக்கட்டணம் பெறாமல் ஆசிரியர்களுக்கு  தொடர்ந்து சம்பளம் தர முடியாது என்பதால், சக்தியுள்ள பெற்றோர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க எங்களுக்கு அனுமதி வேண்டும். அதே சமயம், பணம் இல்லாத பெற்றோரை கட்டணம் செலுத்தச் சொல்லி நிர்ப்பந்தம் செய்யக் கூடாது.  எங்கள் பள்ளிகளில் கடந்த ஜூன் 1 முதல் இணைய வழி வகுப்புகள் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் கட்டணம் செலுத்தியோர், செலுத்தாதோர்,  என்று பார்க்காமல் அனைத்து மாணவர்களுக்கும் இந்த வசதியை அளித்து வருகிறோம்.  பாடங்களையும் மென்பொருள் வழியாக எல்லா மாணவர்களுக்கும் பகிர்ந்து வருகிறோம். காரணம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பது தான். எனவே யாரிடமும் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சொல்வதை ஏற்க இயலாத சூழலில் தனியார் பள்ளிகளின் இன்றைய நிலை உள்ளது.  இதனால் கட்டணத்தில் சலுகைகள் வழங்குதல், இல்லாத பெற்றோர்களுக்கு கால அவகாசம் அளித்தல், பல தவணைகளாக கட்டணத்தை செலுத்த வாய்ப்பு அளித்தல், கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கும் கல்வி அளித்தல், மத்திய அரசு தனியார் பள்ளிகளுக்கு கடன் வழங்கும் விசேஷ திட்டத்தை கொண்டு வருதல் போன்ற நடவடிக்கைகளே இந்தப் பிரச்னைக்கு தீர்வாக அமையும். ஓரிரு மாதங்கள் என்றால் கூட சமாளித்து விடலாம். தொடர்ச்சியாக இப்படி ஒரு நிபந்தனையை நடைமுறைப்படுத்த இயலாது. முதலில் தனியார் பள்ளிகளின் பெற்றோர்களின் பொருளாதார நிலையை நாம் வேறு கோணத்தில் அணுகுவதும் அவசியம்.

Related Stories:

>