×

தமிழகத்தில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் வழிபாட்டு தலங்கள் இன்று திறப்பு இல்லை

* 4 மாவட்டம் தவிர மற்ற பகுதிகளில் அனுமதிக்க அரசு தீவிர பரிசீலனை

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்படவில்லை. அதே நேரத்தில் தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் எடுத்துக்கொண்டு இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுபடுத்த கடந்த மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து, பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில், கோயில், பள்ளிவாசல், தேவாலயங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜை நடந்தது. ஆனால், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. அதே போன்று கோயில், ேதவாலயங்களில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடந்து வருகிறது. மேலும், இஸ்லாமியர்கள் வீடுகளில் இருந்து தொழுகை செய்து வருகின்றனர். கடந்த 75 நாட்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஒரு சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு இன்று முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளித்தது.

 இதை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக சமய தலைவர்களுடன் பேச தமிழக அரசு முடிவு செய்தது. அதன்பேரில் கடந்த 3ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் சமய தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு சமய தலைவர்களையும் தனித்தனியாக அழைத்து ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், வழிபாட்டு தலங்களை மத்திய அரசு அறிவித்தது போன்று இன்று முதல் திறக்கவேண்டும் என்று சமய தலைவர்கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. அப்போது அரசு தரப்பில், வழிபாட்டு தலங்களை திறக்கும் பட்சத்தில், கொரோனா தொற்று ஏற்படாதவாறு, அதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். எனவே, தற்போதைய சூழ்நிலையில், நிலைமையை ஆராய்ந்து தான்வழிபாட்டு தலங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது சமய தலைவர்கள் ஒரு தரப்பினர், கொரோனா தொற்று குறைந்த பின்பே வழிபாட்டு திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தனர். அப்போது அரசு தரப்பில், முதல்வரிடம் இது தொடர்பாக கலந்து ஆலோசித்து இதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால், அந்த பகுதிகளில் கோயில்களில் திறக்க கூடாது என்பது தொடர்பாக திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் சார்பில் கமிஷனர் பணீந்திர ரெட்டிக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த நிலையில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறை தயார் செய்யப்பட்ட நிலையில், இதற்கு தமிழக அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.  
இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், வழிபாட்டு தலங்களில் பொதுமக்களை தற்போது அனுமதித்ததால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த நான்கு மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் அனுமதிக்கலாமா என்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களில் வழிபாட்டு தலங்களில் திறக்க ஆட்சேபம் இல்லாத நிலையில் அங்கு வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இருப்பினும், கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசு சார்பில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், வழிபாட்டு தலங்களை இன்று திறக்க அனுமதியில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

* கடந்த 75 நாட்களுக்கு மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.
* கோயில், தேவாலயங்களில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடந்து வருகிறது.
* இன்று முதல் நாடு முழுவதும் திறக்க மத்திய அரசு அனுமதித்தது.
* தமிழகத்தில் திறக்க அரசு அனுமதிக்காமல் தீவிர பரிசீலனை செய்து வருகிறது.

Tags : places ,Tamil Nadu , progress, Tamil Nadu, places, worship , open today
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...