×

குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக அணைகள் நாளை திறப்பு: பேச்சிப்பாறை நீர்மட்டம் 39 அடியாக உயர்வு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக நாளை அணைகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 39 அடியாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்த அணைகள் கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் மூடப்பட்டன. தொடர்ந்து நாகர்கோவில் நகர பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக பெருஞ்சாணி அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 50 கன அடி வரை தண்ணீர் முக்கடல் அணைக்கு திறந்துவிடப்பட்டிருந்தது. தற்போது மழைக்காலம் தொடங்கியதால் பெருஞ்சாணி அணை மூடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அண்மையில் பெய்த மழை காரணமாக அனைத்து அணைகளிலும் நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் பெய்த கோடை மழை காரணமாக கன்னிப்பூ சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல இடங்களிலும் நெல் வயல்களில் உழவு பணிகளும், விவசாய நடவு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. குளத்து பாசன பகுதிகளில் விவசாயிகள் வயல்களில் நடவு பணிகளை தொடங்கியுள்ளனர். பொதுவாக பாசனத்திற்காக ஜூன் மாதம் முதல் வாரத்தில் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி அணைகளில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அடுத்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் இருந்து திறந்துவிடப்படும். இதனால் குமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன பகுதிகளில் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்தார். அந்த வகையில் நாளை (8ம் தேதி) பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட உள்ளது.

மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 38.80 அடியாக இருந்தது. அணைக்கு 515 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 48.60 அடியாகும். அணைக்கு 689 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 14.59 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 85 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. சிற்றார்-2ல் 14.69 அடியாக நீர்மட்டம் இருந்தது. அணைக்கு 114 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பொய்கையில் 14.60 அடியும், மாம்பழத்துறையாறு அணையில் 52.49 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. முக்கடல் அணை நீர்மட்டம் 5.3 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக குளச்சலில் 76.4 மி.மீ மழை பெய்திருந்தது.

Tags : Kumari ,district ,Negotiations ,Dams Opening , Kumari, Dams Opening, Negotiations
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...