×

பண்ருட்டி அருகே கெடிலம் ஆற்றில் நகராட்சி குப்பைகளை எரிப்பதால் மக்களுக்கு மூச்சு திணறல்: இறந்தவர் உடலை புதைக்க இடம் இல்லாமல் தவிப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே உள்ள திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகே கெடிலம் ஆற்றங்கரை ஓரத்தில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் கடந்த சில ஆண்டுகளாக நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டி எரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில். நகராட்சிக்கு குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதற்கு பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கிடங்கு உள்ளது.

ஆனால் நகராட்சி ஊழியர்கள் கிடங்கிற்கு குப்பைகளை கொண்டு செல்லாமல் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் உள்ள சுடுகாட்டில் குப்பைகளை கொட்டி கொளுத்தி விடுகிறார்கள். இதனால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க இடம் இல்லாத நிலை உருவாகி உள்ளது. இதனால் வேறு வழியின்றி சாலையோரத்தில் இறந்தவர்களின் உடலை புதைத்து வருகிறார்கள். மேலும் குப்பைகளை கொளுத்தும் இடத்தின் அருகில் வட்டாட்சியர் அலுவலகம், வணிக வரி அலுவலகம், தனியார் கம்பெனிகள் மற்றும் குடிருப்பு பகுதிகள் உள்ளன. குப்பைகளை எரிக்கும்போது ஏற்படும் புகையால் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சியினர் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் குப்பைகளை கொட்டாமல் குப்பைகள் தரம் பிரிக்கும் கிடங்கில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Gedillam River ,suffocation ,Panruti Panther , Panther, junk, suffocation
× RELATED குப்பை கொட்டுவதை தடுக்கக்கோரி ராணிமகாராஜபுரம் மக்கள் சாலை மறியல்