×

விழிப்புணர்வு இல்லாததால் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் கிராம மக்கள்

சிவகாசி: சிவகாசி அருகே புதுக்கோட்டை கிராம மக்களிடத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் திறந்தவெளி கழிவறையை பயன்படுத்தும் அவல நிலை தொடர்கிறது. நாட்டில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து மத்திய, மாநில அரசுகள் கோடிக்கணக்கான பணம் ஒதுக்கீடு செய்கின்றன. சுகாதார வளாகங்கள், தனிநபர் கழிவறை என ஒவ்வொரு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சுகாதாரத்தை காக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசின் வளர்ச்சி நிதியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் கிராமங்களில் கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகங்கள் பூட்டி கிடக்கின்றன.

சில கிராமங்களில் சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் கூட போதிய விழிப்புணர்வு இல்லாததால் இன்றளவும் திறந்தவெளியை கழிவறையாக கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், சிவகாசி ஒன்றியம் புதுக்கோட்டை கிராமத்தில் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தும் அவலநிலை தொடர்கிறது. இந்த கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மக்கள் தொகைக்கு ஏற்ப இந்த கிராமத்தில் போதிய சுகாதார வசதி செய்யப்படவில்லை. கிராமத்தில் சுகாதாரம் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதததால் கிராம மக்கள் கண்மாய், முள்வேலி செடிகளை திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

பெண்களுக்காக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் பெயரளவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முகாம் நடத்தப்பட வேண்டும், கூடுதல் சுகாதார வளாகங்கள் கட்டப்பட வேண்டும், தற்போதுள்ள சுகாதார வளாகத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : space , Open space, restrooms, villagers
× RELATED மனவெளிப் பயணம்