×

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல மே 1 முதல் ஜூன் 6 வரை 404 சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 முதல் ஜூன் ஆறு வரை 404 சிறப்பு ரயில்களை இயக்கி ஐந்தரை லட்சம் பேரை ஏற்றிச்சென்றுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாகக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த ஒரு மாதமாக சொந்த மாநிலம் செல்ல முடியாமல் சிக்கித் தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில்கள் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். பல தொழிலாளர்கள் நடந்தே சொந்த மாநிலத்துக்கும் செல்கின்றனர்.

இதில் மகாராஷ்டிராவிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு நடந்தே ரயில் இருப்புப்பாதை வழியாகச் சென்றபோது உயிரிழந்த சம்பவமும் நடந்தது. இதனால் மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 முதல் ஜூன் ஆறு வரை 404 சிறப்பு ரயில்களை இயக்கி ஐந்தரை லட்சம் பேரை ஏற்றிச்சென்றுள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே மண்டலப் பகுதிகளில் ஜூன் ஆறாம் தேதி வரை மொத்தம் 404 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதாகவும், அவற்றில் 5 லட்சத்து 49 ஆயிரம் பேர் சொந்த மாநிலங்களுக்குச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இருந்து 238 ரயில்களும், கேரளத்தில் இருந்து 143 ரயில்களும், கர்நாடகத்தில் இருந்து 20 ரயில்களும், புதுச்சேரியில் இருந்து 3 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து 63 ரயில்களும், எழும்பூரில் இருந்து 13 ரயில்களும், கோவையில் இருந்து 36 ரயில்களும், திருப்பூரில் இருந்து 29 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக அளவில் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.


Tags : 404 Special Trains Movement for Migrant Workers ,Southern Railway , Migrant Workers, Special Trains, Southern Railways
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு 19 சிறப்பு...