×

கொரோனா பரிசோதனை முடிவில் குளறுபடி என புகார்: மாறுபட்ட பரிசோதனை முடிவுகளால் கர்ப்பிணி பெண் குழப்பம்

சென்னை: சென்னை புழல் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் முடிவு மாறி மாறி வெளியாகி இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. காவாங்கரையை சேர்ந்த 26 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணிற்கு கடந்த 2-ம் தேதி புழல்  மாநகராட்சி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சந்தேகம் அடைந்த கர்ப்பிணி பெண் 5-ம் தேதி தனியார் மையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். தனியார் ஆய்வக முடிவில் இவருக்கு கொரோனா தொற்று ஏதும் இல்லை என்று முடிவு வெளியானது.

இதற்கிடையே கர்ப்பிணி பெண்ணை சுகாதார துறையினர் மீட்டு சென்னை ராயபுரத்தில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சேர்த்துள்ளனர். ஆனால் இருவேறு பரிசோதனை முடிவுகளால் தனக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா? என்ற குழப்பத்தில் அப்பெண் ஆழ்ந்துள்ளார். பிரசவ காலத்தில் குழப்பத்தை விளைவிக்கும் விதமாக முடிவுகள் வந்திருப்பது குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. பரிசோதனை முடிவுகளில் தவறு நடந்துள்ளதா? அல்லது வேறு நபரின் முடிவுகள் தவறுதலாக மாறி விட்டதா? என்று புரியாமல் கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.


Tags : Corona , Corona test, mess, pregnant woman, mess
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...