×

மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் பொருளாதாரத்தை சீர்படுத்தக்கூடிய எந்த அறிவிப்பும் வரவில்லை: கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி, கோவில்பட்டி பாரதிநகர், இந்திரா நகர், வானரமுட்டி, ஆத்திகுளம் உள்ளிட்ட பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள், இசைக்கலைஞர்கள், தூய்மைப் பணியாளர்கள் என மூவாயிரம் பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு உணவுப் பொருள்களை வழங்கினார். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினார். இதில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்த அரசாங்கம் தனது சொந்த ஆதாயத்துக்காக எட்டுவழிச் சாலையைக் கொண்டுவருவதில் மும்முரமாக இருக்கிறது. எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து பல போராட்டங்கள், எதிர்ப்புகள் வந்ததைப் பார்த்த பிறகும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், கொரோனா ஊரடங்கு  காலத்தில் பொதுமக்கள் போராடமுடியாத நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முனைகிறது. இது மக்களுக்கு விரோதமான, மிக மோசமான ஒரு முன்னெடுப்பு. இதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது மக்கள் திரண்டு வந்து போராடுவார்கள்.

இன்னும் அதிகமாக கொரோனா தொற்று பரவ இதுவும் காரணமாக அமையும். இத்தனை தவறுகள் செய்த பிறகும் எட்டுவழிச் சாலை திட்டத்தைத் தொடர்வோம் என்று சொல்லும் மனம் அரசாங்கத்திற்கு எப்படி இருக்கும் என்பது புரியவில்லை. மத்திய - மாநில அரசாங்கம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் தான் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் பொருளாதாரத்தை சீர்படுத்தக்கூடிய எந்த அறிவிப்பும் வரவில்லை. தொழிற்சாலை நிறுவனங்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் நடத்துபவர்கள் என யாருக்கும் மகிழ்ச்சியையும், எதிர்காலம் பற்றிய  நம்பிக்கையையும் தரக்கூடிய திட்டங்களை இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை.

Tags : government , Central Government, Economic and Communication MP
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...